நூருல் ஹுதா உமர்
இலங்கையில் இஸ்லாமியர்களின் மார்க்கக் கடமைகளும் அடிப்படை உரிமைகளும் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கம் தொடர்ச்சியாக உணர்வுபூர்வமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனவும், முஸ்லிம் சமூகத்தை “மாற்றாந்தாய் பிள்ளைகள்” போல நடத்தும் அரசியல் மனப்பான்மை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமெனவும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியர்களின் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதற்கான உரிமை தொடர்பில் ஏற்பட்டிருந்த விவாதங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பல முக்கியமான அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் அவர் குறிப்பிடுகையில், உழ்ஹிய்யா கடமையை பாதுகாப்பதற்கான உரிமை எவராலும் “ரகசிய போராட்டத்தின் வெற்றி” என உரிமைகோரப்பட முடியாது எனத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மார்க்க அமைப்புகள் மற்றும் சில சிறிய அரசியல் கட்சிகள் வெளிப்படையாக குரல் கொடுத்து, சமூக உணர்வுகளை ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்தியதன் விளைவாகவே இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இப்போது சிலர் ‘நாங்கள் மறைமுகமாக போராடினோம்’, ‘ரகசியமாக செயல்பட்டோம்’ என்று கூறி பெயர்வைக்க முயல்வது அரசியல் வேடிக்கையாகும். உரிமைக்காக தெருக்களில் குரல் கொடுத்த மக்களின் போராட்டத்தை மறைத்து, பின்னர் அதற்கான புகழை அபகரிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்லாமியர்களின் மார்க்கக் கடமைகள் சட்ட மற்றும் சுகாதார ஒழுங்குகளுக்கு அமைவாக சுதந்திரமாக நிறைவேற்றப்படுவதற்கான நடைமுறைகளை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் பலம் பெற்றதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் தரப்புகள், இன்று முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் புரிந்துகொள்ளத் தவறிவருகின்றன. அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துரைக்கப்படாதது கவலையளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும், முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் இருவர் இருந்தும், அதில் ஒருவர் சமய விவகாரங்களுக்கான பிரதியமைச்சராக இருந்தும் சமூக அநீதிகள் தொடர்பில் வலுவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்படாதது வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, முஸ்லிம் சமூகம் பலவீனமான சமூகமல்ல என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். “காலா காலமாக இருந்து வந்த உரிமையை உறுதிப்படுத்தியதற்காக நன்றிகள் கூறும் அளவுக்கு முஸ்லிம் சமூகம் பலவீனப்படுத்தப்பட்ட சமூகமல்ல. எங்களுடைய உரிமைகள் எங்களுக்கான அடிப்படை ஜனநாயக உரிமைகள். அவற்றை வழங்குவது யாருடைய தயவோ கருணையோ அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
“சில அரசியல்வாதிகள் திரைப்பட நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க நேரம் ஒதுக்குகின்றனர். ஆனால் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து பேசுவதில் மௌனம் காக்கின்றனர். உரிமைக்காக நன்றிகள் கூற வேண்டிய நிலைக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்படக்கூடாது” எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கை ஒரு பல இன, பல மத நாடாகும் என்பதையும், தேசியக் கொடியில் பிரதிபலிக்கப்படும் மதச்சார்பற்ற ஒற்றுமை நடைமுறையிலும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
“தேசியக் கொடியில் அனைத்து சமூகங்களுக்கும் இடமுண்டு. அதுபோல நாட்டின் ஆட்சி, சட்டம், நிர்வாகம் மற்றும் அரசியல் நடைமுறைகளிலும் அனைத்து சமூகங்களும் சம உரிமையுடன் மதிக்கப்பட வேண்டும். மத, இன வேறுபாடுகளை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாமல், சமூக ஒற்றுமையை பாதுகாக்கும் அரசியல் பண்பாடு உருவாக வேண்டியது அவசியம்” என ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments: