News Just In

5/01/2026 06:56:00 PM

சாய்ந்தமருது நகர சபை, கல்முனை மத்தி கல்வி வலயம், கல்முனை வடக்கு பிரதேச செயலக வர்த்தமானி உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் !

சாய்ந்தமருது நகர சபை, கல்முனை மத்தி கல்வி வலயம், கல்முனை வடக்கு பிரதேச செயலக வர்த்தமானி உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்தது அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் !


நூருல் ஹுதா உமர்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பெயரில் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை உடன் அமுல்படுத்தி வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையை இயங்க செய்யுமாறும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு ஒரு பிரதேச சபையும், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு ஒரு பிரதேச சபையை அமைக்கவும், சாய்ந்தமருது நகர சபையாக உருவாக்குவதற்காக பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானியை வலுவுள்ளதாக ஆக்குவதற்கு ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்துமாறும் அரசை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கோரியுள்ளது.

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 2026ம் ஆண்டுக்கான மே தின நிகழ்வு இன்று (2026.05.01) கல்முனையில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், இவ்வாண்டிற்கான மே தின தீர்மானங்களை வெளியிட்டார். இதன்போதே மேற்கண்ட தீர்மானத்தை அறிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அரச நிர்வாக சுற்றறிக்கை க்கு 10/2000 அமைவாக அமைச்சுக்களின் ஆலோசனை சபை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுமாறு அரசைக்கோருவதுடன், அரச ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாட்டை தீர்க்குமாறு கோருகின்றோம். அத்துடன் தீர்வு காணப்படும் வரைக்கும் குறைந்தது ரூபா 10,000/- இடைக்கால கொடுப்பனவு ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு அரசை கோருகின்றோம் என்றார்.

மேலும் தங்களது பண்டிகையை கொண்டாடும் முகமாக அரச ஊழியர்களுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு விசேட கொடுப்பனவைக் குறைந்தது 30,000/- மீள அறவிடப்படாத நன்கொடையாக வழங்குமாரும் அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சீருடைப்படியை ரூபா 10,000/- ஆக உயர்த்துமாறும் அரசைக் கோரினார்.

தொடர்ந்தும் கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்ற சபையின் தீர்மானத்திற்கு அமைவாக 2026 இடமாற்ற முன்மொழிவுப் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த ஆசிரியர்களுக்குரிய இடமாற்றத்தை கால தாமதப்படுத்தாது உடன் வழங்க வேண்டுமெனக் கோருவதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கராச்சி பிரதேச சபை பிரிவை நிர்வாக பரவலாக்களின் பொருட்டு இரண்டு பிரதேச சபைகளாக பிரிக்குமாறு அரசை கோரியதுடன் 40 வருடங்களாக செயற்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை மாண்புமிகு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வர்த்தமானி வெளியிடுமாறும் கோரினார்.

225 வருடம் பழமைவாய்ந்த கல்முனை ஆதார வைத்தியசாலையை பொது வைத்திய சாலையாக தரமுயர்த்துமாறு அரசை கோரியதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரிவுக்கு பிரதேச சபை ஒன்றை அமைக்குமாறு அரசை கோரி கிழக்கு மாகாண சபையினால் அங்கிரிக்கப்பட்ட கல்முனை மத்திய கல்வி வலயம், பொத்துவில் கல்வி வலயம் உஹண கல்வி வலயம் என்பவற்றை அங்கிகரிக்குமாறு கல்வி அமைச்சைக் கோரினார்.

No comments: