
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், 3 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டார். அதில், ஒன்று பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ என்னும் திட்டம்.
இந்த திட்டத்துக்கான அரசாணையில் கூறியிருப்பதாவது: பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக்கூடிய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கப்படும்.
ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, இந்த சிறப்பு அதிரடிப்படை போதுமான போலீஸாருடன் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.
குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கப்படும்.
பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக் கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்கள் தடுக்கப்படும்.
புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, அவர்களது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன் இதர ஆதரவுகள் கிடைத்திட வகை செய்வது உள்ளிட்ட உதவிகள் உரிய நேரத்தில் செய்யப்படும்.
சமூக நலத்துறை, கல்வித் துறை, அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடும்.
‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’யின் தலைமை அலுவலகம் டிஜிபி அலுவலகத்தில் இயங்கும். ஐஜி அந்தஸ்தில் ஒரு உயர் அதிகாரி தலைமையேற்பார்.
அவருக்குக் கீழ் ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பி-க்கள், 4 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 20 பேர் என மொத்தம் 36 போலீஸாருடன் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments: