News Just In

5/15/2026 09:09:00 AM

கல்முனை கடற்கரைப் பகுதியில் சரிந்து விழும் அபாயத்தில் மின் தூண்கள் – உடனடி நடவடிக்கை அவசியம்: ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்

கல்முனை கடற்கரைப் பகுதியில் சரிந்து விழும் அபாயத்தில் மின் தூண்கள் – உடனடி நடவடிக்கை அவசியம்: ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்


நூருல் ஹுதா உமர்

கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள கடற்கரைப் பகுதியில் இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் தூண்கள் கடலரிப்பின் காரணமாக சரிந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதால், அதனை அவசர அடிப்படையில் சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு. முஸ்னத் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் கல்முனை கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு தீவிரமடைந்து வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். இத்தகைய கடலரிப்பினால் தற்போது மின் தூண்கள் கடலுக்குள் இழுக்கப்படும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமை மேலும் மோசமடைந்தால் கல்முனை முழுவதும் பாரிய மின்சார அனர்த்தம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. குறிப்பாக பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் மின்சார விநியோகத் தொடர்ச்சிக்கு இது கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

கரையோரப் பகுதிகளில் நிலவும் இக்கட்டான சூழ்நிலைகளை அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு செல்வதோடு மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், நிரந்தரமான தீர்வுகளை முன்னெடுக்க இதுவரை உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆட்சிக்காலத்தில் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் வரையிலான பகுதிகளில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை கடல்தடுப்பணை நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின்னர் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை.

கல்முனைத் தொகுதி மக்கள் பல தசாப்தங்களாக அரசியல் கட்சிகளுக்கு வாக்குகளை வழங்கி வந்தபோதிலும், இப்பகுதிக்கான அடிப்படை அபிவிருத்தி தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, கடலரிப்பினால் மின் தூண்கள் கடலுக்குள் இழுக்கப்படுவதைத் தடுக்கும் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: