News Just In

5/13/2026 06:11:00 PM

கபில சந்திரசேன இறுதியாக பேசிய வார்த்தைகள் - நெருங்கிய உறவினர்கள் வழங்கிய முக்கிய வாக்குமூலம்

கபில சந்திரசேன இறுதியாக பேசிய வார்த்தைகள் - நெருங்கிய உறவினர்கள் வழங்கிய முக்கிய வாக்குமூலம்



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த மோசடி தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேனவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கபில சந்திரசேனவின் மனைவியின் சகோதரியின் கணவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிலேயே கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது சாட்சியமளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா,

"கபில பிணையில் வருவதற்கு தேவையான ஆவணங்களை சரிசெய்ய நான் உதவினேன். மே 7ஆம் திகதி காலை எனக்கு அழைப்பு விடுத்து நன்றி கூறினார். அன்று மதியம் அவருக்கு மீண்டும் நீதிமன்ற பிரச்சினை இருப்பதாக கேள்விப்பட்டு, அவரை எமது வீட்டிற்கு வரச்சொன்னேன். அன்று இரவு அவர் தனது வீட்டுக்குச் சென்று மருந்துகள் மற்றும் 'ஜிம் மேட்' (Gym Mat) ஒன்றைக் கொண்டு வருமாறு தனது பணியாளரிடம் கூறிய நிலையில், எதற்காக ஜிம் மேட்?' என்று கேட்டபோது, உடைகளைத் தொங்கவிட அது தேவை என அவர் கூறினார்.

இரவு அவர் என்னிடம், 'நான் வெளியே வந்து ஒரு நாள் தான் ஆகிறது, மீண்டும் என்னை சிறையில் தள்ளப்பார்க்கிறார்களே' என்று கவலையுடன் கூறினார்.

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. சட்டத்தரணியுடன் சேர்ந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறையில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டேன். மருத்துவர் வந்து அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார் என சாட்சியமளித்துள்ளார்.
மிகுந்த மன உளைச்சல்

இதன்போது சாட்சியமளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் மனைவி,

கபில இறப்பதற்கு முந்தைய இரவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை. எனது தங்கை மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். கபில அமைதியான சுபாவம் கொண்டவர்.



மே 6 ஆம் திகதி அவர் பிணையில் வந்ததாகக்கூறி எமது வீட்டுக்கு தனியாக வந்தார்.மறுநாள் மாலை அவர் மீண்டும் எமது வீட்டுக்கு வந்தபோது ஒரு திறப்பை என்னிடம் கொடுத்து, தனது வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிடுமாறு கூறினார்.

அன்று இரவு சட்டத்தரணிகளை சந்தித்துவிட்டு இரவு 10 மணிக்கு திரும்பினோம். கபில உணவருந்தவில்லை. இரவு 11 மணிக்கு அவர் உறங்கச்சென்றார். மறுநாள் காலை 7 மணியளவில் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால், 'மாற்று திறப்பு' மூலம் கதவைத் திறந்தோம். அவர் கட்டிலில் இருக்கவில்லை. அறையில் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை நான் உணர்ந்தேன். அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்" என சாட்சியமளித்துள்ளார்.

No comments: