
நாட்டின் பழங்குடித் தலைவர் தனிகல மகாபண்டலகே சுதுவன்னில அத்தானாவின் பூதவுடலை கொழும்பிலிருந்து பதுளைக்கு எடுத்துச் செல்வதற்கு ஜனாஸா நலன்புரி சங்கம் வாகனம் வழங்கியமை பலராலும் பாராட்டப்படுகிறது. வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா நலன்புரி சங்கம், இதற்கான வாகனத்தை ஒழுங்குகளைச் செய்திருந்தது. உடல்நலக் குறைவு காரணமாக, பழங்குடித் தலைவர் சுதுவன்னில அத்தானா கடந்த சில காலமாக வெலிசர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.காணி மற்றும் விவசாய சீர்திருத்த இயக்க அமைப்பின் உறுப்பினர்கள் அவரின் தேவைகளையும் நலன்களையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த மே 07 ஆம் திகதி மாலை அவர் உயிரிழந்தார். பின்னர், அவரது பூதவுடலை வெலிசரவிலிருந்து பிபிலை நகருக்கு கொண்டு செல்ல வாகன வசதிக்காக ரூபாய் 80,000 வரை கட்டணம் கோரப்பட்டது.பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு அந்தத் தொகையை செலுத்துவது கடினமாக இருந்துள்ளது. இச்சூழ்நிலையில், வெலிசர மருத்துவமனை காவல் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு, வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் இமாம் மற்றும் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.இதையடுத்து
வத்தளை பள்ளிவாசலின் ஜனாஸா நற்பணிமன்றத்தினர் வாகனத்தை வழங்கி உதவியிருந்தனர்.இந்த மனிதநேய செயற்பாட்டிற்காக, உதவிக்கரம் நீட்டிய பொலிஸ் அதிகாரிக்கும், வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி உள்ளிட்ட ஜனாஸா நலன்புரி சங்கத்தினருக்கும் பல தரப்பினரும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
No comments: