News Just In

4/20/2026 08:36:00 AM

வடக்கு கிழக்கில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிப்பு

வடக்கு கிழக்கில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிப்பு




தியாக தீபம் அன்னை பூபதியின் தியாகத்தை நினைவு கூரும் முகமாகவும், அவரின் தியாகத்தை அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முகமாகவும் அன்னாரின் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நேற்று  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அன்னை பூபதியின் திருவுருவப் படம் ஏந்திய வாகன பேரணி 11ம் நாளான இன்று அன்னை உண்ணா விரதம் ஆரம்பித்த மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு வருகைந்ததுடன் அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரின் திருவுருவப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அனை தொடர்ந்து நினைவேந்தலின் பிரதான நிகழ்வு நேற்றைய தினம் (19) மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் நடைபெற்றது.

இதன்போது அன்னை பூபதிக்கான திதிக் கடமைகள் குடும்ப உறவுகளால் முன்னெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அன்னை பூபதிக்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அன்னையின் இளைய மகள் ராதாவால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், அன்னையின் மூத்தமகள் சாந்தியால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகை தந்தவர்களினால் சுடரேற்றி, மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தாயக செயலணியின் மட்டக்களப்பு இணைப்பாளர் இருதயம் செல்வகுமார் மற்றும் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், அன்னை பூபதியின் குடும்ப உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தேச விடுதலைக்கான அன்னையின் தியாகம் உள்ளிட்ட தமிழர் போராட்ட வரலாற்றினை எதிர்கால சந்ததிக்குக் கடத்தும் முகமாக அஞ்சலி உரைகள் இடம்பெற்றதுடன், அன்னையின் நினைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசில்கல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னை பூபதியின் நினைவேந்தலை சிறப்பிக்கும் முகமாக தாயக செயலணியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கவிதை, பேச்சு, கட்டுரை போன்ற கல்விசார் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புற மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு திருகோணமலை - வெருகல் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது பிரதான தீபச்சுடர் ஏற்றப்பட்டு அன்னை பூபதியின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

No comments: