News Just In

4/18/2026 06:19:00 PM

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரைகுறை அபிவிருத்தி என்பது இல்லை.!கிழக்கு மாகாண ஆளுநர்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அரைகுறை அபிவிருத்தி என்பது இல்லை.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏற்கெனவே கோலோச்சிய அரசாங்கங்கள் கையாண்டது போல துண்டு துண்டாக, அரைகுறையாக அபிவிருத்தி செய்யும் கொள்கை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இல்லை. சகல அபிவிருத்திகளும் முழுமையாகச் செய்யப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்தார்.

ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்ட பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தற்போதைய ஏறாவூர் நகர சபைத் தலைவருமான எம்.எஸ். நழிம் தலைமையில் பொதுச் சந்தைக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் ரத்னசேகர, 10 வருடம் நிறைவு பெறாத அபிவிருத்தியை தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடத்தில் முடித்து வைத்துள்ளது.

இது போன்று ஏற்கெனவே இருந்த அரசாங்கங்களால் தொடங்கப்பட்டு முடித்து வைக்கப்படாத அபிவிருத்திகள் அனைத்தும் எமது அரசாங்கக் காலத்தில் முடித்து வைக்கப்படும்.

எங்கள் அரசில் இன, மத, மொழிவாத, அரசியல் கட்சி வேறுபாடுகள் இல்லை. கிழக்கு மாகாணத்தை முன்னுதாரணம் மிக்க முதல் தர மாகாணமாக மாற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. அந்த இலக்கை அடைய இங்கு வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமை அவசியம் தேவை.

தேவைக்கில்லாத வகையில் தொடக்கி வைக்கப்பட்ட மத்திய கிழக்கு யுத்தம் முடிவுக்கு வர வேண்டும்; என்று எல்லோரும் நல்ல முறையில் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த யுத்தம் உலக நாடுகளில் எத்தனையோ பிரச்சினைகளை உருவாக்கியிருக்கிறது. இன்னும் குறுகிய காலமே வாழக்கூடிய வயோதிப நிலையிலுள்ளவர் தொடக்கி வைத்த யுத்தத்தினால் எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேநேரம் வயோதிபத்தில் உள்ளவரின் யுத்த விருப்பத்திற்கு, வாழ வேண்டிய வயதிலுள்ள இளம் வீரர்களே பலியாகிறார்கள். அதனால் இந்த அர்த்தமற்ற யுத்தம் முடிவடைய வேண்டும் என்று எல்லோரும் மனமுருகிப் பிரார்த்தியுங்கள்” என்றார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முன்னாள் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உட்பட இன்னும் பல அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும், ஊர்ப்பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் நவீன பொதுச்சந்தைக்கான நிருமாணப் பணிகள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், அமைச்சரும், ஆளுநருமாக இருந்த செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டினால் மாகாண சபை மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அனுமதியோடு 193 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் சகல விதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி 2016ஆம் ஆண்டு வேலைகள் தொடக்கி வைக்கப்பட்டன.

எனினும், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி நஸீர் அஹமட்டின் முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் பொதுச் சந்தை அபிவிருத்திப் பணிகள் முற்றுப்பெறாமல் இடைநடுவில் நின்று போயின.

இதே இடத்தில், முன்னர் இருந்த சந்தையில் வியாபாரம் செய்த 150 க்கு மேற்பட்ட வியாபாரிகள் வெளியேற்றப்பட்டு தற்காலிக கட்டிடம் ஒன்றில் வியாபாரம் செய்ய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல சமூகங்களும் ஒன்று சேரும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, இலாபகரமான பொதுச் சந்தை எனப் பெயர் பெற்ற ஏறாவூர் பொதுச் சந்தை நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்தித் தருமாறு கோரி, தொடர்ச்சியாக வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: