News Just In

4/21/2026 05:36:00 AM

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல்களின் 7ஆம் ஆண்டு நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல்களின் 7ஆம் ஆண்டு நிறைவு




உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட வழிபாடுகளும், நீதியைக் கோரும் அமைதி பேரணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய இன்று காலை 8:45 மணிக்கு குண்டு வெடித்த நேரத்தில் அனைத்துத் தேவாலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றி பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படும். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும். இதில் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்வர்.

உயிரிழந்தவர்களுக்கான நீதியையும் உண்மையும் வலியுறுத்தி, மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரி மைதானத்திலிருந்து கட்டுவாப்பிட்டி தேவாலயம் வரை பிரார்த்தனைப் பேரணி நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அருட்தந்தை ஜூட் கிருஷாந்த பெர்னாண்டோ,

ஏப்ரல் 21 என்பது எமக்கு ஒரு துக்ககரமான நாள் மாத்திரமல்ல, இந்நாட்டின் அரசியல் கலாசாரம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்திய ஒரு நாளாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதில் இன்று எழுந்துள்ள பிரதான சவாலானது, அரசாங்கமும் அதற்குத் துணை நிற்பவர்களும் விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்க முயற்சிக்கும்போது, பல்வேறு வெளித்தரப்பினர் அந்த விசாரணைகளைத் திசைதிருப்பவும், முடக்கவும் முயற்சிப்பதே ஆகும்.

மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசியல் கலாசாரத்தை இந்நாட்டில் கட்டியெழுப்புவதற்கு, இந்த படுகொலை ஒரு காரணியாக அமைய வேண்டும். இந்த படுகொலைக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுத்தால் மட்டுமே அதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

அதற்காக எமக்கு எப்போதும் துணை நிற்குமாறு இறைவனிடம் பிரார்த்திப்போம். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு மேரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்திலிருந்து ஆரம்பமாகும் இந்த மாபெரும் பிரார்த்தனைப் பேரணியில் அனைவரும் பக்தியுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

No comments: