நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் சிரேஷ்ட மாணவர்களுக்கான விடுகை விழா, “வெண்மல்லிகை” சஞ்சிகை வெளியீட்டு விழா, புலமையாளர்கள் கௌரவிப்பு மற்றும் இணைப்பாடவிதானப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை பகுதித்தலைவர் எம்.சி. பாரீஸ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தரமுகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எம். ஹில்மி பிரதம அதிதியாகவும், பாடசாலையின் அதிபர் எம்.ஐ. சம்சுதீன் மற்றும் உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், பாடசாலை நிறைவேற்றுக்குழு செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா விசேட அதிதியாகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். சிரேஷ்ட மாணவர்களின் கல்வி பயணத்தை கௌரவிக்கும் வகையில் விடுகை விழா நடத்தப்பட்டதுடன், மாணவர்களின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் “வெண்மல்லிகை” இதன்போது சஞ்சிகை வெளியிடப்பட்டது.
மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் இணைப்பாடவிதானப் போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், மாணவர்கள் கல்வியுடன் இணைந்து ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய உற்சாகத்தையும் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் அமைந்தது.
No comments: