
: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை செவ்வாய்க்கிழமை அன்று அவரது சகோதரி உஸ்மா கான் சந்தித்தார். சிறையில் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமரானார். இதையடுத்து 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் இருந்தார். கூட்டணிக் கட்சிகளே திடீரென ஆதரவை விலக்கி கொண்டதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராவல்பிண்டி நகரின் அடியாலா சிறையில் அவர் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
“இம்ரான் கான் நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலையும் சீராக உள்ளது. தனிச்சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மன ரீதியான துன்புறுத்தலை அவர் எதிர்கொண்டுள்ளார். அவர் யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்தார். நடக்கும் அனைத்தும் அசிம் முனீர்தான் காரணம் என அவர் தெரிவித்தார்” என சிறையில் தன் சகோதரரை சந்தித்த உஸ்மா கான் தெரிவித்தார்.
முன்னதாக, நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி சிறையில் இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் நோரின் நியாஸி, அலீமா கான், உஸ்மா கான் ஆகிய 3 பேர் வந்தனர். ஆனால், இம்ரானை சந்திக்க அவர்களுக்கு போலீஸாரும் சிறை நிர்வாகத்தினரும் அனுமதி தரவில்லை.
இதனால் அவர்களும் இம்ரானின் பிடிஐ கட்சி தொண்டர்கள் ஏராளமானோரும் சிறைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவியது. அடியாலா சிறைக்குள் வைத்து, இம்ரான் கானை பாகிஸ்தான் ராணுவம் கொலை செய்துவிட்டதாகவும், அவரை போலீஸார் கடுமையாக தாக்கி இருப்பதாகவும் சமூக வலைதளப் பதிவுகள் ஏராளமாக வெளியாயின. இந்த பதிவுகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவந்தன.
இதையடுத்து அடியாலா சிறை வளாகத்தில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டனர். இம்ரான் கானை பார்க்க வேண்டும் என்று அவர்கள் சிறை வளாகத்துக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிடிஐ கட்சித் தொண்டர்கள் தொடர்ந்து இரவு, பகலாக சிறை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இந்த சூழலில் தன் தந்தை உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு சிறை நிர்வாகத்துக்கு இம்ரான் கானின் மகன் காசிம் கான் வலியறுத்தி இருந்தார். இந்நிலையில், இம்ரான் கானை அவரது சகோதரி உஸ்மா கான் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: