மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப் பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய மாற்றிடம் இல்லாவிட்டால் அவர்களை வடபகுதியில் குடியேற்ற வேண்டும் என சில அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அரசியல் களத்தில் எதையும் பேசலாம் என்ற நிலையே இன்றுள்ளது. புதிதாக அரசியல் செய்ய வந்தவர்களுக்கு மலையக வரலாறும் மலையக மண்ணை பாதுகாக்க எத்தகைய தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் தெரியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட பிரமுகரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கந்தசாமி நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தற்போது அரசியல்வாதிகள் முகநூல் அரசியல் செய்வதால் களத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். மலையக மக்களை மிகவும் பாதித்த ஒரு சம்பவம் ஜுலை கலவரமாகும்.அச்சந்தர்ப்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்தார். அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக அவர் இருந்ததால் அது சாத்தியமாயிற்று.
இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, கம்பளை, நுவரெலியா என பல மலையக நகரங்களுக்குச் சென்ற அவர் மக்களிடம் வினயமாகக் கேட்டுக்கொண்டது ஒரு விடயம் மாத்திரமே. தயவு செய்து நீங்கள் இந்த மண்ணை விட்டு சென்று விடாதீர்கள். எமது மக்கள் மீது காடைத்தனத்தை ஏவி விட்டவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையான இனவாதிகளே. அவர்களுக்கு பயந்து கொண்டு நாம் ஏன் எமது மண்ணை விட்டுச் செல்ல வேண்டும்? இங்கிருந்தே போராடுவோம். நானும் அதற்குத் தயார். நாமும் எமது பரம்பரையினரும் கட்டியெழுப்பிய இம்மண்ணை பாதுகாப்பது எமது கடமை.
எதிர்காலத்தில் நாம் இந்த மண்ணில் சகல துறைகளிலும் தடம் பதிப்போம். ஆகவே வன்முறைகளுக்கு பயந்து கொண்டு எமது மண்ணை விட்டு செல்லும் எண்ணம் இருந்தால் அதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள் என்றார். நான் அப்போது அவரது பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பதிகாரியாக இருந்ததால் அவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் அவருடன் நானும் பயணித்தேன். மலையக மண்ணை பாதுகாப்பதிலும் எதிர்கால திட்டமிடலிலும் அவரது தீர்க்கதரிசனத்தை கண்டு வியந்தேன்.
கல்வி,குடியிருப்பு, இளைஞர் கட்டமைப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் அவரது செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளன. வன்முறையை காரணம் காட்டி அன்று பெருந்தொகையானோர் வெளியேறியிருந்தால் எமது பிரதிநிதித்துவங்கள் இல்லாது போயிருக்கும்.இன்று அரசியல் வீரவசனம் பேசும் சிலர் கறுப்பு ஜுலை கலவரம் உட்பட பல சந்தர்ப்பங்களில் அச்சத்தினால் இந்தியாவுக்கு ஓடியவர்கள் என்பது முக்கிய விடயம். ஆனால் இன்று அப்படியான ஒரு சூழ்நிலை இல்லை. நிலவுரிமை தொடர்பில் நாம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். அதை முன்னெடுப்பதற்கு பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமை அவசியம்.
அதை கட்டியெழுப்புவதை விடுத்து இங்கே இல்லாவிட்டால் வேறு எங்காவது செல்வோம் எனக் கூறுவது கோழைத்தனம் மாத்திரமின்றி போரட்ட உணர்வு மங்கி போன அரசியலின் வெளிப்பாடு. எமது மண்ணை விட்டு மக்கள் சென்றால் அது வெளியாரின் ஆக்ரமிப்புக்கு வழிவகுக்கும். மலையகம் என்ற அடையாளம் கேள்விக்குறியாகும். எனவே அரசியல் பிரமுகர்கள் ஏதாவது பேசுவதற்கு முன்பு சிந்தித்து வார்த்தைகளை வெளிப்படுத்தல் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்
12/14/2025 09:21:00 AM
Home
/
Unlabelled
/
மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப் பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி
மலையக மண்ணை வெளியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதா அல்லது பாதுகாப் பதா எமது பொறுப்பு : மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கந்தசாமி நாயுடு கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
No comments: