
நிவாரணம் கிடைத்ததா என்று குறிப்பு எடுப்பதற்கு மக்கள் மத்தியில் செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு பிஸ்கெட்டாவது கொண்டு செல்ல வேண்டும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கம்பஹா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் ஏற்பட்ட இழப்புக்களை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபா உதவித்தொகை 98 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 50 இலட்சம் ரூபா வழங்கலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. அரச அதிகாரிகள் மந்தகதியில் செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். அனர்த்தத்தால் அரச உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களின் குடும்பத்தாரும், உறவினர்களும் உயிரிழந்துள்ளார்கள். ஆகவே நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் அரச உத்தியோகத்தர்கள் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைளில் ஈடுபடுகிறார்கள்.
இயற்கை அனர்த்தங்களால் பெருந்தோட்ட மக்கள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும் அவர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவர் நாடு முழுவதும் சென்று நிவாரணம் கிடைத்ததா, கிடைத்ததா என்று மக்களிடம் கேட்டு குறிப்பு எடுத்துக்கொள்கிறார். மக்கள் மத்தியில் வெறுங்கைகளுடன் செல்லாமல் பிஸ்கெட் பெக்கட்டாவது கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
No comments: