நூருல் ஹுதா உமர்
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றிணைந்து திரட்டிய உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் விநியோகத்தின் இறுதிக்கட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றது.
பொருட்களாகவும் நிதியாகவும் சேகரிக்கப்பட்ட இந்த நிவாரண உதவிகள், ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின் பாதிப்புக்குள்ளாகிய பல பின்தங்கிய கிராமங்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
பதுளை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் வழிகாட்டலில், மாவட்டத்தின் மடுல்சீமா, பட்டவத்தை, பதுள்ளபிட்டிய, புவக்கொடமுள்ள, ஹாலியெல்ல பகுதிகளிலும் மலையகத்தின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கல்முனை அனர்த்த நிவாரண முகாமைத்துவ பணிமனையின் தொண்டர்கள் நேரில் சென்று நிவாரணங்களை வழங்கினர். அதில் பொரகஸ், கோவில் பத்தின (பள்ளிமலை), ரேந்தப்போல மற்றும் அபரகள எஸ்டேட் பகுதி வாழ் மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால் மா, பிஸ்கட் வகைகள் மற்றும் ஆடைகள் என்பன விநியோகிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பிரதான உலர் உணவுப் பொதியும் 18 வகையான அத்தியாவசிய பொருட்களை கொண்ட சுமார் 7,700.00 ரூபா ஆகும். இவற்றுக்கு மேலதிகமாக, நிவாரணச் சேகரிப்பு நிலையங்கள் ஊடாக மக்களிடமிருந்து திரட்டப்பட்ட ஆடைகள், போர்வைகள், பாய்கள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் சுகாதாரப் பொருட்கள் என்பன அந்தந்தப் பிரதேசங்களின் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டு, மிகவும் தூர இடங்களிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: