News Just In

12/12/2025 03:08:00 PM

ரயில்வே திணைக்கள அதிபர்களாக பெண்களையும் உள்ளீர்க்க முடியும் : அமைச்சரவை தீர்மானத்தை நீதிமன்றில் தெரிவித்தது அரசாங்கம் !

ரயில்வே திணைக்கள அதிபர்களாக பெண்களையும் உள்ளீர்க்க முடியும் : அமைச்சரவை தீர்மானத்தை நீதிமன்றில் தெரிவித்தது அரசாங்கம் !



ரயில்வே திணைக்கள அதிபர்களை உள்ளீர்க்கும் வர்த்தமானியில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இன்றையதினம் உயர்நீதிமன்றுக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களத்தில் ரயில் ஓட்டுநர், ரயில் கட்டுப்பாட்டாளர், ரயில் நிலைய அதிபர் மற்றும் ரயில்வே மேற்பார்வை மேலாளர் பதவிகளுக்கும் பெண் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய, இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கடந்த நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னின்று செயற்பட்ட சமூக செயட்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

நீதிமன்றில் நாம் தொடுத்த வழக்கின் அடிப்படையில், புகையிரத திணைக்கள அதிபர்களை உள்ளீர்க்கும் வர்த்தமானியில் ஆண்கள் மாத்திரம் தான் விண்ணப்பிக்க முடியும் என்ற வரையறையை நாம் சவாலுக்கு உட்படுத்தினோம். அதன் இறுதிக் கட்ட விசாரணை இன்று உயர் நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்றையதினம் 3 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்படி, அரச சொலிஸிஸ்டர் ஜெனரல் சார்பாக பெண்களை புகையிரத நிலைய அதிபர்கள் மட்டுமல்ல, புகையிரத சாரதிகள், முகாமையாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் போன்ற அனைத்து துறைகளிலும் உள்ளீர்ப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆகவே இன்றிலிருந்து ரயில் நிலைய உழியர்களை உள்வாங்கும் செயற்பாட்டில், பெண்களை பாரபட்சம் காட்டும் செயற்பாடடை சட்ட ரீதியாக நீக்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் தகைமையுடைய பெண்களை இந்த தொழிலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்த செயற்பாடு யாப்பில் உள்ளபடி, சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நாளாக இன்று உள்ளது. அத்துடன் இந்த அரசாங்கத்திற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். சுமார் 76 வருடங்களாக இவ்வாறான பாரபட்சமான சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கண்டும் காணாமல் கடந்த கால அரசாங்கங்கள் இருந்துள்ளன. ஆனால் தற்போதைய அரசாங்கம் நாம் முன்வைத்த விவாதத்தை ஏற்றுக்கொண்டு அதனை மாற்றியமைத்துள்ளது. நாம் விடுத்த கோரிக்கைக்கும் அப்பால் சென்று ஏனைய விடயங்களிலும் பெண்களை உள்ளீர்ப்போம் என்ற அமைச்சரவை தீர்மானத்தை இன்று உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

No comments: