எதிர்காலக் குழந்தைகள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற வேண்டும் : இலங்கையில் உருவாகும் புதிய சமூக – ஆன்மீக எழுச்சி- அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ்
இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அடித்தளமாக குழந்தைகள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நாட்டில் ஒருகாலத்தில் “அரகல” என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சியை விடவும் வேகமாக, தற்போதைய சூழலில் ஒரு புதிய ஆன்மிக–சமூக எழுச்சி பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த எழுச்சியின் மையமாக, மார்க்க போதனைகளின் மூலம் மனிதநேயத்தையும் கருணையையும் வலியுறுத்தி வரும் கண்ணொருவ தேரர் திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலட்சக்கணக்கான நபிமார்களில் புத்தரும் ஒருவராக இருக்கலாம் என்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்துகளை நினைவூட்டிய அவர், கண்ணொருவ தேரரின் போதனைகள் மனித காருண்யத்தை அடிப்படையாகக் கொண்டு, பெரும்பான்மை மக்களிடையே நிலவி வந்த இன, மத வேறுபாடுகளை மிக விரைவில் களைந்து விடும் ஆற்றல் கொண்டவை என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள் மத்தியில் பரவிவரும் போதைப்பொருள் பழக்கத்தையும், அவருடைய போதனைகள் மூலம் மாற்றம் காணச் செய்யும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என அவர் கூறினார். கண்ணொருவ தேரர் வருகை தரும் ஒவ்வொரு இடத்திலும், குறிப்பாக இளைஞர்களை மையமாகக் கொண்டு, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடுவது இந்த மாற்றத்தின் சான்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய எழுச்சி நாட்டிற்கு ஒரு நல்ல சகுனமாக இருப்பினும், அதீத வளர்ச்சி கண்டுவரும் இந்த இளம் தேரருக்கு எதிர்காலத்தில் தடைகள் உருவாகுமா என்ற கேள்வியும் எழுகின்றதாக அவர் கவலை வெளியிட்டார்.
இவ்வாறான சமூக மாற்றங்கள் உருவாகும் இந்நேரத்தில், வரும் காலத்தில் எமது குழந்தைகள் அனைவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக வளர வேண்டும். அதனை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார்.
No comments: