
பாராளுமன்றம் இன்றும் (18) நாளையும் (19) கூடி அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்து நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டுப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு அமைய இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பான குழுக் கூட்டத்திலேயே,மேற்படி பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளன.இன்று18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு மதிப்பீட்டுப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் அது ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இயற்கை அனர்த்தத்தின் பின்னரான நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் நாளை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன்,500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு மதிப்பீட்டுப் பிரேரணை,பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு சபை அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படவுள்ளது.
No comments: