News Just In

11/13/2025 02:45:00 PM

சாய்ந்தமருதை அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க பொறுப்பு வாய்ந்த சகல திணைக்களங்களும் ஒருமித்து செயலாற்ற முன்வரவேண்டும்

சாய்ந்தமருதை அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க பொறுப்பு வாய்ந்த சகல திணைக்களங்களும் ஒருமித்து செயலாற்ற முன்வரவேண்டும் - சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்



நூருல் ஹுதா உமர்

அனர்த்தங்களை முறையாக கையாண்டு பாதிப்புக்களை குறைத்து பாதுகாப்பான சாய்ந்தமருதை தக்கவைப்பதே எங்களுக்கு இலக்காக இருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எங்களுக்குக் கடும் சோதனையாக இருந்தது. ஆனால் மக்களும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து விரைவாக செயல்பட்டதால் பெரும் சேதத்தைத் தடுக்க முடிந்தது என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் அனர்த்த முகாமைத்துவ செயற்குழு (Working Committee) ஒன்றை அமைப்பது தொடர்பான நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் 2025.11.12 ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாசா சங்கங்கள், பள்ளிவாசல் நிர்வாகங்கள், பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கம், ஜமியத்துல் உலமா சபையினர், இளைஞர் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியே சாய்ந்தமருதை கடந்த காலங்களில் இடம்பெற்ற அனர்த்த சேதங்களிலிருந்து பாதுகாத்தது.

“இனிமேலும் இதுபோன்ற அனர்த்தங்களுக்கு முன்னேற்பாடாக அரசு மற்றும் மக்கள் இணைந்து ஒருங்கிணைந்த செயற்குழு மூலம் செயல்படுவோம். இதன் மூலம் பிரதேசத்தின் பாதுகாப்பு மட்டுமல்ல, சமூக ஒற்றுமையும் வலுப்படும். எதிர்வரும் காலநிலை மாற்றங்களை கவனத்தில் கொண்டு சாய்ந்தமருதை ஊடறுத்து ஓடும் தோணா மற்றும் வடிகான்கள் சுத்தப்படுத்தப்படுவது அவசியம். கரையோரம் பேணல் திணைக்களம், கல்முனை மாநகர சபை, நீர்ப்பாசன திணைக்களம் ஆகியவை இணைந்து பணியாற்றினால் இப்பகுதி வெள்ளத்திலிருந்து முழுமையாக பாதுகாக்கப்படும்.

பிரதேசத்தின் இயற்கை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மாஸ்டர் பிளான் ஒன்றை வடிவமைத்து, அதனடிப்படையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு அங்கத்தினர்களும் நியமிக்கப்பட்டனர்

No comments: