கல்வியைப் பற்றி சிறப்பாக பேசிய அமைச்சர் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பிரச்சனைகள், தமிழ் பேசும் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் பற்றியும் பேசினால் மிக மகிழ்வாக இருக்கும். கல்வி அமைச்சின் விவாதத்தில் கௌரவ பிரதமர் அவர்களே வரலாறு பாடத்தினை விருப்பத் தேர்விற்குரிய பாடமாக மாற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. வரலாறு பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இப் பாடத்தினூடாக சரியான வரலாற்றினை இந் நாட்டு மக்களுக்கும், எதிர்கால சந்ததிக்கும் கற்பிக்க வேண்டுமெனும் வேண்டுகோளை பிரதமர் அவர்களிடம் முன்வைக்கின்றேன்.
இந் நாட்டிலே 200, 300, 1000 அதற்கும் மேலான ஆண்டுகளில் தமிழ் மன்னர்கள் எவ்வாறு இவ் நாட்டினை ஆண்டனர் பூர்வ குடியினர் யார், பிரித்தானியர்களும் இந் நாட்டிற்கு புதிய அரசியலமைப்பை உருவாக்கிய போது அக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் அதனை ஏற்க மறுத்த வரலாறு, 1926ம் ஆண்டில் முதன் முறையாக சமஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வு தான் இந் நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியென SWRD பண்டாரநாயக்க கூறிய கருத்துக்கள், டொனமூர் யாப்பு போன்ற அனைத்து யாப்பு சம்மந்தமான விடயங்கள் பற்றியும் இதற்கு எவ்வாறு தமிழ் மக்கள் தம் எதிர்ப்பினை வெளியிட்டனர், 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி வரலாறு பாடத்தில் உள்ளடக்குவதன் மூலமாகவே எதிர்வரும் தலைமுறையினர் இந் நாட்டிலுள்ள மக்கள் சம உரிமையுள்ள மக்கள் எனும் நம்பிக்கையுடன் வாழ தயாராக இருப்பர். அவ்வாறில்லை எனின் தொல்பொருள் திணைக்களத்தால் எம் மக்கள் படும் அவலங்கள் இன்னும் தொடர்ச்சியாக நடைபெறும்.
கடந்த 3 வாரங்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. இக் காயங்களை ஆற்ற உங்களால் நிரந்தரமான அரசியல் தீர்வினை வழங்குவதன் மூலமாக மாத்திரமே இந்த வடுக்களை ஆற்றக்கூடிய சூழ்நிலையை நீங்கள் உருவாக்கலாம்.
கௌரவ பிரதமர் அவர்களே மன்னர்கள் காலம் தொடக்கம் இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதி வரை உண்மையான வரலாற்றை வரலாறு பாடத்திலே சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
No comments: