மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்தின் சார்பில் கிழக்கில் பொதுமன்னிப்புக் கோரலும் பிரகடனம் வெளியீடும்
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கிய முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வலிந்து வெளியேற்றப்பட்டது சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைய ஒரு “பாரிய மனித உரிமை மீறலாகும்” என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தனது பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வட மாகாண முஸ்லிம்கள் வலிந்து வெளியேற்றப்பட்ட துயரத்தின் 35வது வருடத்தில் பொதுமன்னிப்புக் கோரலைச் செய்துள்ள அந்த அமைப்பு வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் பொதுமக்களை ஒன்றிணைத்து முதன் முறையாக ஒன்றுகூடி தனது துயரத்தையும் பகிர்ந்துள்ளது.
வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில் நினைவு கூரல்
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் யார்ட்சன் பிகிராடோ தலைமையில் மட்டக்களப்பு தன்னாமுனை மியாமி கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து சுமார் 450 பேருக்கு மேற்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். சிங்கள சமூக மனித உரிமைகள் ஆர்வலர்களும் நிகழ்வில் பங்குபற்றினர்.
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் கலை கலாச்சார பீட பேராசிரியர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய ஒருங்கிணைப்பாளர் எம்.எல்.எம். இஸ்ஸதீன், வன்முறையற்ற மோதல் தீர்வுக்கான மையத்தின் இயக்குநர் ஆறுமுகம் சொர்ணலிங்கம், யாழ்ப்பாணம் மகளிர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் எம்.ஏ.எம். சியானா, யாழ்ப்பாணம் சிவலைப் பள்ளி முஹைதீன் தக்கிய்யா தலைவர் மௌலவி ஏ.எம். அப்துல் அஸீஸ், மனித உரிமை ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு இணை இணைப்பாளர் விநாயகமூர்த்தி கமலினி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் துரையப்பா காந்தன், இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் சகவாழ்வும் அரசியல் மன்னிப்புக் கோரலும் எனும் அறிக்கைப் பிரகடனத்தை வாசித்தார்.
அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் மக்களுக்குப் போன்றே இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கும் பாரம்பரிய வாழ்விடமாகும். மதங்கள், கலாச்சார நடைமுறைகள் வேறுபட்டிருப்பினும் வரலாற்று ரீதியாக இரு இனங்களும் தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இது வடக்கு கிழக்கு பிரதேசத்தின் கலாசார பன்முகத்தன்மையின் சிறப்பம்சமாகும்.
இலங்கை அரசின் தமிழர் மீதான இனவாத அடக்குமுறையும், அதற்கெதிராக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களும், இலங்கை அரசின் தொடர்ச்சியான உரிமை மறுப்புகளும், இறுதியில் தமிழ் மக்கள் தனியரசு அமைக்கும் 1976 வட்டுக் கோட்டை அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ளும் நிலையை உருவாக்கியது.
மறுபுறம், தமிழ் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்று 1983களுடன் தீவிரமடைந்தது. இக்காலப் பகுதியில் பிரதானமான விடுதலைப் போராட்ட அமைப்புகள் ஐந்தும் இன்னும் பல ஆயுத அமைப்புகளும் இயங்கி வந்தன.
முஸ்லிம் மக்களும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கினர். முஸ்லிம் இளைஞர்கள் சில பிரதான தமிழ் போராட்ட அமைப்புகளில் முக்கிய பங்கு வகித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் தேசிய விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளதை வரலாறு மறக்காது.
மறுபுறம், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களை சில தமிழ் ஆயுத அமைப்புகள் துன்புறுத்தத் தொடங்கின.
அதன் காரணமாக தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பிளவு ஏற்படலானது. முரண்பாடுகள் வளர்ந்து தமிழ் முஸ்லிம் உறவு பகைமை உறவானது. எனினும், வட மாகாண முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படவில்லை. தமிழ் – முஸ்லிம் உறவும் சுமுகமாகவே இருந்தது.
இந்நிலையில், 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அச்சமயம் யாழ்ப்பாண மாவட்டத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த தமிழீழ விடுலைப்புலிகள் வடமாகாண முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு கட்டளை பிறப்பித்தனர்.
தமது பாரம்பரிய வாழ்விடத்தை, இருப்பிடங்களை, சொத்துக்களை, வாழ்வாதாரங்களை கைவிட்டு “சொப்பிங்” பையில் உடைகளுடன் வடமாகாணத்திலிருந்து வெளியேறினர்.
அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்த துயரம் நடந்து நடப்பாண்டு 2025இல் 35 வருடங்களாகிறது.
வட மாகாண முஸ்லிம் மக்கள் வலிந்து வெளியேற்றப்பட்டமை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைய ஒரு “பாரிய மனித உரிமை மீறலாகும்” (Gross Human Rights Violation) (Commission of Human Rights, Resolution 1993/77).
இந்த மனித உரிமை மீறல் நடைபெறுகையில் தமிழ் சமூகம் அமைதியாயிருந்தது. அந்த வகையில் தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர்.
தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டியெழுப்பும் கடப்பாடு தமிழர்களுக்கு உள்ளது. அதன் முதற்படி தமிழர்கள் முஸ்லிம்களிடம் அரசியல் மன்னிப்பு கோருவதாகும்.
வட மாகாண முஸ்லிம் மக்கள் வலிந்து வெளியேற்றப்பட்டதற்காக பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தாலும், தமிழ் மக்களான நாம் முறையான அரசியல் மன்னிப்பைக் கோருவது எமது வரலாற்றுக் கடமையாகும்.
மன்னிப்புக் கோரல் நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் அடிப்படையாகும். குற்றமிழைத்த தரப்பு பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் மன்னிப்பு கோருவதும் மனம் வருந்துவதும் அவர்களின் அரசியல், சமூகக் கடமையாகும். மறுபுறம், பாதிக்கப்பட்டோர் தமக்கு தவறிழைத்தவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்பார்ப்பது பாதிக்கப்பட்டோரின் உரிமையாகும்.
ஜனநாயக அரசியல் சூழலை உருவாக்குவதற்காகவும், சமூக மாற்றங்களுக்காகவும் செயற்படும் சிவில் அமைப்புகள், சமூக இயக்கங்கள், அறிவுத்துறையினர் தாம் சார்ந்த சமூக, அரசியல் தரப்பினரால் சக சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மன்னிப்பு கோரியதை முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளிலும் காண முடிகிறது. “அரசியல் மன்னிப்புக் கோரல்” என்பது நாகரீக மக்கள் சமூகங்களின் பண்பாகும்.
சேர்பியா, கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற அரசுகளின் தலைவர்களும் மக்களும் தமது தரப்பினரால் கடந்த காலத்தில் உரிமை மீறல்களை எதிர்கொண்ட மக்கள் சமூகங்களிடம் அரசியல் மன்னிப்புக் கோரியதை சிறந்த வரலாற்று முன்மாதிரியாகக் கொள்ள முடியும்.
அரசியல் மன்னிப்புக் கோரலுடன் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை மதித்து ஏற்பதும், மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதும் அடங்கியுள்ளது. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டத் தரப்பினர் எந்தவிதமான அச்ச உணர்வுமின்றி, சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியும் எனும் நம்பிக்கையை ஊட்டுவதற்கும் அரசியல் மன்னிப்புக் கோரல் அவசியமாகும்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரான நாங்களும், எம்மோடு இணைந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்தின் சார்பில், வலிந்து வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம் மக்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கோருகிறோம்.
ஒரு தலைமுறை கடந்தாயினும், இரண்டாம் தலைமுறையினரான நாங்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருவதை எமது வரலாற்றுக் கடமையாகக் கருதுகிறோம்.
அத்துடன், வடமாகாண முஸ்லிம் மக்களின் முறையான மீள்குடியேற்றம், இழப்பீடு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் கலாசார மேம்பாடு, நினைவேந்தல்கள் ஆகியவற்றுக்காக அவர்களுடன் இணைந்து பரிந்துரைகளை மேற்கொள்வதை எமது கடமையாகக் காண்கிறோம்.
No comments: