News Just In

8/12/2025 05:38:00 PM

கல்முனை கடலரிப்பு அனர்த்தம் : உடனடி நடவடிக்கைக்காக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கல்முனை கடலரிப்பு அனர்த்தம் : உடனடி நடவடிக்கைக்காக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


நூருல் ஹுதா உமர்
கல்முனை கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில், கடலரிப்பு அபாயத்தை நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (12) செவ்வாய்க்கிழமை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்னாயக்க ஆகியோர், கரையோர பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் திரு. துளசிதாசன் சகிதம் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.

விஜயத்தின் போது, அசமந்தமாக செயற்பட்டிருந்த சம்பந்தப்பட்ட கொந்தராத்துகாரர் பணிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொறியியலாளர் தெரிவித்தார். மேலும், காலத்தை வீணாக்காமல் மாற்று வழிமுறைகள் மூலம் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவை வழங்கினர்.

இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களுடன் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டு, கடலரிப்பு அபாயத்தின் தற்போதைய களநிலவரங்களை விளக்கினர்

No comments: