News Just In

8/01/2025 10:33:00 AM

திருக்கோவில் மயானத்தில் அகழ்வு!இனியபாரதி வழக்கில் மர்மங்கள் வெளிவருமா?

திருக்கோவில் மயானத்தில் அகழ்வு!இனியபாரதி வழக்கில் மர்மங்கள் வெளிவருமா?



திருக்கோவிலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான 'இனியபாரதி' என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் தலைமையிலான குழுவால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு. ரவீந்திரநாத், மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் எச்சங்களைத் தேடும் அகழ்வு நடவடிக்கை நேற்று (வியாழக்கிழமை) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) முன்னெடுக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இனியபாரதி மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் கடந்த ஜூலை 6 ஆம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதிகளில் வைத்து CIDயினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைதைத் தொடர்ந்து, இனியபாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 'தொப்பி மனாப்' என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலிகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த 'யூட்' என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்தீபன், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத், மற்றும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட ஆகியோர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, CIDயினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று, உடல்கள் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களை அடையாளப்படுத்தினர். இதற்கமைய, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எம். ரிஸ்வான் முன்னிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 'யூட்' என அழைக்கப்படும் ரமேஸ்கண்ணா அடையாளம் காட்டிய இடத்தை, நேற் பிற்பகல் 2:00 மணிக்கு பெக்கோ இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கையில் CIDயினர் ஈடுபட்டனர்.

இந்த அகழ்வுப் பணியின் போது, எந்தவிதமான மனித உடற்பாகங்களும் மீட்கப்படவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஏராளமான பொதுமக்கள் மயானப் பகுதியில் திரண்டு நிற்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
இந்த அகழ்வு நடவடிக்கைகள், காணாமல் போனவர்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான மர்மங்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments: