
ஜனாதிபதி அனுரகுமார , யாழ் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக சாத்தியங்கள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார எதிர்வரும் முதலாம் திகதி வருகை தரவுள்ளார்.
இந்நிலையில் யாழில். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே கடற்தொழில் அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்திற்கு முதலாம் திகதி ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மக்களின் காணிகள் மக்களிடமே கையளிக்கப்படும் என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு.
அதன் அடிப்படையில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும். அது ஜனாதிபதி வருகை தரும் நாள் அன்றோ , அதற்கு முதலோ பின்னரோ நடைபெறலாம்.
அதனை எப்ப என தற்போது உறுதியாக கூற முடியாது. ஆனாலும் காணிகள் விடுவிக்கப்படும் என்பது நிச்சயம். செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிடுவாரா என்பதனையும் தற்போது நிச்சயமாக கூற முடியாது.
சில வேளைகளில் அவற்றை பார்வையிட சந்தர்ப்பம் உண்டு எனவும் கடற்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மையிலிட்டி மீன் பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து , யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் மதியம் 1.30 மணியளவில், மண்டதீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மறுநாள் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், தென்னை முக்கோண வலய பணிகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
No comments: