செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தினால் சாட்சியமளிக்கத் தயார்; கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளி அறிவிப்பு

யாழ்.செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அத்தோடு 7 ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்தில் கொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் சடலங்களை கப்டன் லலில் ஹேவாகேயின் ஆணைக்கு அமைய புதைத்ததைத் தவிர வேறேந்தக் குற்றத்தையும் தனது கணவர் புரியவில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று கடந்தகால அரசாங்கங்கள் இராணுவ உயரதிகாரிகளைப் பாதுகாத்துக்கொண்டு, கீழ்மட்ட வீரர்களைத் தண்டிப்பதன் ஊடாக, குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தாம் தண்டித்திருப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கூறிவந்ததாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும்,
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளார்.
அதன்படி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். எனவே செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும், அதில் சாட்சியமளிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் எனது கணவர் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட எனது கணவர் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் 7 ஆவது காலணி இராணுவப்படையணியின்கீழ் செம்மணி பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டவந்தபோது இடம்பெற்ற மனிதப்படுகொலையுடன் தொடர்புடையவகையில் கைதுசெய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து மூவரடங்கிய நீதியரசர் குழாமின் முன்னிலையில் நடைபெற்ற விசேட வழக்கு விசாரணைகளின் பின்னர் 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 29 வருடங்களாக அவர் சிறையில் இருந்துவருகிறார்.
இருப்பினும் இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் எனது கணவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.
மாறாக 7 ஆவது காலணிப்படை தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரியான கப்டன் லலித் ஹேவாகே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு மரணித்தவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்படும்.
No comments: