
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ரஷ்யா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பலம்வாய்ந்த பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பாதாள உலகக் கும்பல்களில் பொடிலெசி, ரொட்டும்பா அமில, வெலியோயா பிரியந்த மற்றும் மிதிகம சுட்டி ஆகியோர் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து பொடி லெசி கைது செய்யப்பட்டார்.
தற்போது அந்த நாட்டின் குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை இன்னும் இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்த வழக்கு அடுத்த ஒக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். ரொட்டும்பா அமில ரஷ்யாவில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக அந்த நாட்டின் நீதிமன்றங்களில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
மிதிகம ருவான் ஓமானில் கைது செய்யப்பட்டார். வெலியோயா பிரியந்த டுபாயில் கைது செய்யப்பட்டார். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர தற்போது இராஜதந்திர முயற்சிகள் நடந்து வருகின்றது.
இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில், டுபாய் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பிற நாடுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலக குற்றவாளிகள் அந்த நாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அல்டோ தர்மா மற்றும் லலித் கன்னங்கர ஆகியோர் அவர்களில் அடங்குகின்றனர்.
குடு அஞ்சு பிரான்ஸில் கைது செய்யப்பட்டாலும், அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவில்லை. அவர் தற்போது அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
கஞ்சிபாணி இம்ரான் மற்றும் ரூபன் ஆகியோர் பிரான்சில் இருப்பதாக கூறப்படுகிறது.
டுபாயில் சிறிது காலம் இருந்த பல பாதாள உலக குற்றவாளிகள் இப்போது பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஒஸ்ரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பாதாள உலக குற்றவாளிகளான ரத்கம விதுர, கொஸ்கொட சுஜி, குடு லால், அனன்சி மோரில், முகமது சித்திக் போன்றவர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர்.
No comments: