இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில், சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வரும் எஸ்.எம்.எம். ஜிஃப்ரி, பீம் வளைவளவு அளவீட்டு கருவி (Deflection of Beam Apparatus) ஒன்றை உருவாக்கி, பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த புதிய உபகரணம், சந்தையில் சுமார் மூன்று மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதி உடையது. ஆனால், பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு தொழில்நுட்ப வளங்களையும், சொந்த அறிவு திறமைகளையும் பயன்படுத்தி, மிக குறைந்த செலவில் இதை உருவாக்கும் அபார சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
2025 ஆகஸ்ட் 15 அன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், சிவில் பொறியியல் துறைக்கு சென்று, புதிதாக உருவாக்கப்பட்ட இந்த உபகரணத்தை நேரில் பார்வையிட்டார். கருவியின் துல்லியமான செயல்பாடு, வடிவமைப்பின் நேர்த்தி, மற்றும் உள்ளடங்கிய புதுமை திறனைக் கண்டு அவர் பெரிதும் வியந்தார்.
நிகழ்வின் போது, உபவேந்தர், ஜிஃப்ரிக்கு பாராட்டுப் பத்திரம் ஒன்றை வழங்கி, "பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலர்களின் படைப்பாற்றல், திறமைகள், மற்றும் தொழில்நுட்ப நுணுக்கம், கல்வித் தரத்தை உயர்த்துவதில் மிகுந்த பங்கு வகிக்கின்றன. எதிர்காலத்திலும் இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கும் தயாரிப்புகளுக்கும் பல்கலைக்கழகம் முழு ஆதரவு வழங்கும்" என உறுதியளித்தார்.
இந்த Deflection of Beam Apparatus கருவி, கட்டமைப்பு பொறியியல் (Structural Engineering) பாடங்களுக்கான ஆய்வகப் பயிற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் பீம்களின் வளைவளவை நேரடியாக அளவிட்டு, கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைக்கும் அனுபவத்தைக் கற்றுக்கொள்ள உதவும்.
இதன் மூலம் மாணவர்களின் செயல்முறை அறிவு, கையாளும் திறன், மற்றும் ஆராய்ச்சி மனப்பாங்கு மேம்படும். மேலும், பல்கலைக்கழகத்தின் ஆய்வக அடிப்படையிலான கல்வி முன்னேற்றத்துக்கும் இது வலு சேர்க்கும்.
பாராட்டு கடிதத்தில், உபவேந்தர் பேராசிரியர் ஜுனைடீன், ஜிஃப்ரியின் தொழில்நுட்ப நுணுக்கம், அர்ப்பணிப்பு, மற்றும் புதுமை உணர்வு ஆகியவற்றை சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இவ்வகை முயற்சிகள் மாணவர்களுக்கு அனுபவ அடிப்படையிலான கற்றலையும், பல்கலைக்கழகத்தில் புதுமை மற்றும் சுயநம்பிக்கையை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன" என பாராட்டினார். அவர் காட்டிய தொழில்முறை ஒழுக்கம் மற்றும் முன்முயற்சி, பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் கற்றல் நோக்கங்களை முன்னேற்றுவதில் விலை மதிப்பற்றது என்றும் குறிப்பிட்டார்.
இந்த சிறப்பு நிகழ்வில், பொறியியல் பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் பலர் பங்கேற்று ஜிஃப்ரியின் சாதனையை வாழ்த்தினர்.
இந்த கண்டுபிடிப்பு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளூர் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தின் திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாகவும், நாட்டின் உயர் கல்வி துறையில் ஒரு ஊக்கமளிக்கும் மைல் கல்லாகும் அமைந்துள்ளது
No comments: