மன்னார் தீவுக்குள் மக்களை அச்சுறுத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது - ரிஷாத் பதியுதீன்
அரசாங்கத்திடம் 159 அல்ல 200 எம்.பி.க்கள் இருந்தாலும் மன்னார் தீவுக்குள் சண்டித்தனம் மூலம் எதனையும் செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பொலிஸாரை ,அதிரடிப்படையை அனுப்பி திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தோல்வியடையுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மன்னாரில் கடந்த 2,3 தினங்களாக மக்கள் .மதத்தலைவர்கள் ,அரசியல் பிரமுகர்கள் அரசியல் பேதங்களுக்கு அப்பால் தள்ளாடியில் வீதியில் நின்று இரவு பகலாக காற்றாலை மின் திட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடுகின்றனர் அந்த மக்கள் ஏன் இந்த திட்டத்தை எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்தை அறிய வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இருக்கிறது.
இந்த மின்சார திட்டத்திற்கோ அல்லது அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கோ மன்னார் மக்களோ அல்லது மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளான நாங்களோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் இந்த விடயங்களை கொண்டு வருகின்றபோது அந்த மக்களோடு .மக்கள் பிரதிநிதிகளோடு பேச வேண்டிய தார்மிக பொறுப்பு அரசுக்கு இருக்கிறது
இந்த திட்டம் தொடர்பில் மக்களின் எதிர்ப்பு எழுந்தபோது அபிவிருத்திக்குழுக் கூடடத்தில் நாம் இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் பேச வேண்டும் எனக்கூறினோம். அவ்வாறு கூறியதையடுத்து அமைச்சர் மன்னாருக்கு வந்தார். அவ்வாறு வந்தவர் ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி உறுப்பினர்களுடன் மட்டும் சந்தித்து பேசி விட்டு சென்று விட்டார்.
ஒரு முதலீட்டாளருக்கு அரசு ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றபோது அதற்கு எதிராக மக்களின் வெறுப்பு இருக்கின்றபோது ,அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மக்கள் இந்த வெறுப்பை காட்டுகின்றபோது,இவ்வாறான முடிவுகளை நீங்கள் எடுக்கின்றபோது அமைச்சர் அந்த இடத்துக்கு வந்து அம்மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட வேண்டும். நீங்கள் பாராளுமன்றம் வந்து ஒருவருடமும் ஆகவில்லை. நாம் 25 வருடங்களாக இங்கு இருக்கின்றோம். எங்களுடன் நீங்கள் பேச வேண்டும் .எங்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கிருக்கின்றது.
அதனை விடுத்து சண்டித்தனமாக செய்ய முற்படுகின்றீர்கள். உங்களிடம் 159 அல்ல 200 எம்.பி.க்கள் இருந்தாலும் மன்னார் தீவுக்குள் சண்டித்தனம் மூலம் நீங்கள் எதனையும் செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.மக்களோடு மக்களாக நாங்கள் நிற்போம்.மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பொலிஸாரை ,அதிரடிப்படையை அனுப்பி திட்டங்களை நடைமுறைப்படுத்த நீங்கள் முயற்சித்தால் தோல்வியடைவீர்கள் என்பதை உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன்.
நாளை (இன்று )நீங்கள் எங்களை சந்திப்பதாக அறிகின்றோம். நல்லது. மன்னார் ஒரு சர்வதேச தீவு. அங்கு ஏற்கனவே பல மின்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதனால் அங்கு மக்கள் வாழ முடியாத. மீன்பிடித் தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்வாறான முதலீட்டாளர்களை நீங்கள் அங்கு கொண்டு வருவதனால் அந்த மக்களுக்கு 5 சதம் கூட பிரயோசனம் இல்லை. மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு கூட இவற்றில் வேலைவாய்ப்பில்லை . ஒரு காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்கப்பட்டால் மன்னார் பாரிய சுற்றுலாத்தலமாக , பொருளாதார மேம்பாடடையும் இடமாக மாறும். எனவே அதனை தடுக்கும் வேலைகளை செய்யாதீர்கள்.
அவுஸ்திரேலியா,சீனா என எல்லோரும் மன்னாருக்குத்தான் வருகின்றார்கள். மன்னாரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. எனவே இந்த திட்டங்களை வேறுபகுதிக்கு மாற்றுங்கள் என்றார்
8/07/2025 07:35:00 AM
Home
/
Unlabelled
/
மன்னார் தீவுக்குள் மக்களை அச்சுறுத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது - ரிஷாத் பதியுதீன்
மன்னார் தீவுக்குள் மக்களை அச்சுறுத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது - ரிஷாத் பதியுதீன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: