News Just In

8/20/2025 04:11:00 PM

“விவாதச் சமர் – 2025”: தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடத்திய இறுதிச்சுற்றில் கலை கலாசார பீட “வாக்புரி அணி அதிரடி வெற்றி!

விவாதச் சமர் – 2025”: தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடத்திய இறுதிச்சுற்றில் கலை கலாசார பீட “வாக்புரி அணி அதிரடி வெற்றி!


நூருல் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் பெருமையுடன் நடாத்திய “விவாதச் சமர் – 2025” போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் கௌரவிப்பு விழா, 2025.08.18 ஆம் திகதி திங்கட்கிழமை பல்கலைக்கழக தொழினுட்பவியல் பீடத்தின் பிரதான மண்டபத்தில், சிறப்பாகவும் உற்சாக மிகுந்தும் நடைபெற்றது.
தமிழ் மொழியின் வாக்கு வீரியத்தை மேடையில் இறக்கி, மாணவர்களின் அறிவுத்திறன், வாதத்திறன், சிந்தனை ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும் முக்கிய குறிக்கோள்களை கொண்ட இப்போட்டி, பல வாரங்களாக பல்கலைக்கழக அளவில் முன்னெடுக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்து பீடங்களைச் சேர்ந்த முப்பத்தி மூன்று அணிகள் பங்குபற்றிய இப்போட்டித் தொடரில் - பல சுற்றுக்களைத் தாண்டி தேர்வு செய்யப்பட்ட இரண்டு அணிகள் இறுதியில் மோதின.

“வில்லெய்து பல சமர்க்களம் கண்டோம்; சொல்லெய்து சமர் புரியும் களம் காண” என்ற அடிக்கோட்டோடு நடைபெற்ற இறுதிச்சுற்றில், வாக்புரி அணி மற்றும் சிந்தனைச் சிறகுகள் அணி எனும் இரு அணிகளும் பலத்த வாதப்பிரதிவாதங்களுடன் களமிறங்கின.

"இலங்கையில் மாறிவரும் கல்விச் சீர்திருத்த முயற்சிகள் கல்வியின் இலக்குகளை அடைந்துள்ளது/அடையவில்லை" என்ற தலைப்பில் இரு அணிகளும் வாதிட்டன.

போட்டியில் தீவிரமான வாக்குமூலங்களும், புள்ளிவிவரங்கள், உள்ளூர் மற்றும் உலகளாவிய தகவல்களின் ஆதாரங்களுடனான வலுவான வாதங்களும் இடம் பெற்றன. ஆசியப் பாராளுமன்ற முறையைப் பின்பற்றி போட்டித்தொடர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் வாக்புரி அணி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

இந்நிகழ்வின் முதன்மை அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் (கலாநிதி) எஸ். எம். ஜுனைதீன் அவர்களும் சிறப்பு அதிதியாக கலை மற்றும் கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் (கலாநிதி) எம். எம். பாஸில் அவர்களும் பங்கேற்றனர்.

அத்துடன் பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் ஹலிம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட பதில் பீடாதிபதி கலாநிதி றாசிக், தொழில்நுட்ப பீட பீடாதிபதி கலாநிதி அப்துல் மஜீத், பல்கலைக்கழகத்தின் முதலாவது சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பேராசிரியர்கள் எம்.ஐ.எம். கலீல், ஏ.எல்.எம். றியால், எஸ்.எம். அய்யூப், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.கே. இரகுபரன், கலாநிதி ஏ. டபிள்யு. என். நளீபா, கலாநிதி ஐ.எல்.எம். சாஹிர், கலாநிதி. எம். றிஸ்வான், சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரி. ஏ. அஷ்ஹர் உள்ளிட்ட பல பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைத் தலைவர்கள், மாணவர்கள், கல்விசாரா அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தனர்.

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தமது உரையில்,

“விவாத மேடை என்பது மாணவர்களின் சிந்தனைத் திறனை விரிவாக்கும் சிறந்த வாய்ப்பாகும். அறிவும் திறமையும் மட்டுமல்லாது, அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தும் திறனும் அவசியமானது. அத்திறனை வளர்க்கவும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெரிதும் துணைபுரிகின்றன,” என்று குறிப்பிட்டார். மேலும், “நான் பொறுப்பேற்று இரண்டரை மாதங்களாகும் நிலையில், கலை மற்றும் கலாச்சார பீட மாணவர்களின் திறமைகள் எங்கள் எதிர்பார்ப்பை விட அதிகமெனத் தெரியவந்தது. இன்றைய நிகழ்வு மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இடம்பெற்றிருப்பதைப் பார்த்து பெருமையாக உணர்கிறேன்,” என்றார்.

பீடாதிபதி பேராசிரியர் பாஸில் தமது உரையில்,

"மாணவர்கள் பெற்ற அனுபவங்கள் எதிர்காலத்தில் தலைமைத்துவம், குழுப் பண்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். அதோடு, இறுதிச்சுற்றில் மாணவர்கள் சிந்தனைபூர்வமான அணுகுமுறையுடன் கருத்தாடலை முன்னெடுத்தமை பாராட்டத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டார்.

விழாவின் இறுதியில், வெற்றி பெற்ற அணியினரும், பங்கேற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். நடுவர்கள் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகள், எதிர்கால போட்டிகளில் மாணவர்கள் சிந்தனையை மேலும் ஆழமாகவும், வாதங்களை பொறுமையுடனும் ஆராய்ந்து வெளிப்படுத்த உதவும் வகையில் அமைந்திருந்தது.

இந்நிகழ்வை முன்னெடுத்து இணைப்பாளராகப் பணியாற்றியவர் தமிழ்த் துறையின் விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆவார். அவரது வழிநடத்தலால் நிகழ்வு ஒழுங்குமுறையுடனும் சிறப்புடனும் நடைபெற்றது

No comments: