News Just In

7/30/2025 02:02:00 PM

அண்மையில் காலமான கல்விமான் என்.ரீ.சிராஜுதீன் அவர்களுக்கு அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் விசேட துஆ பிரார்த்தனை !

அண்மையில் காலமான கல்விமான் என்.ரீ.சிராஜுதீன் அவர்களுக்கு அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் விசேட துஆ பிரார்த்தனை !



நூருல் ஹுதா உமர்

அண்மையில் காலமான ஓய்வு பெற்ற மூத்த பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான என்.ரீ.சிராஜுதீன் அவர்களுக்கான விசேட துஆ பிரார்த்தனை இன்று அக்கரைப்பற்று மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் ஏ. எல் நசீபா தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளராக மர்ஹும் பொறியியலாளர் சிராஜுதீன் பதவி வகித்த காலத்தில் நிறைய கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய கல்லூரி அதிபர், மர்ஹூம் சிராஜுதீன் அவர்கள் பாடசாலைக்கு வழங்கிய பங்களிப்புகளை நினைவு கூறினார். பாடசாலை உள்ளக வீதி, பாடசாலையின் பெயர் பலகை, பாடசாலை மைதானத்திற்கு மண் நிரப்பியமை, பாடசாலைக்கான நிரந்தர நீர்த்தாங்கி என பல பாடசாலை சார்ந்த அபிவிருத்திகளை செய்த அவருக்காக மாணவர்களை பிராத்திக்குமாறு வேண்டிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சபூர் ஆதம் உரையாற்றினார், அவருடைய உரையில் “எதுவித அரசியல் அதிகாரமும் இல்லாத நிலையில் ஓர் பதவிநிலை அரச உத்தியோகத்தராக, எந்த சலசலப்பும் இல்லாமல் ஒரு அதிகாரியாக நாட்டிற்கும் , இந்த பிராந்தியத்திற்கும் உச்சபட்சமாக உழைத்தவர்” என்றார் .மேலும் அவர் உரையாற்றுகையில், "பொறியலாளர் மர்ஹூம் சிராஜுதீன் அவர்கள், கடந்த காலங்களில் அவர் வேலை செய்த அமைச்சின் திட்டங்களினாலும் இவரின் தனிப்பட்ட முயற்சிகளால் பல மில்லியன் பெறுமதியான சேவைகளை செய்து ஒரு ஆளுமையுள்ள அதிகாரியாக மிளிர்ந்தவர். அவருடைய பணிகளின் அடையாளங்கள் எமது பிராந்தியத்தின் வரலாறு முழுவதும் சாட்சியங்களாக இருக்கின்றன.

இறுதிக் காலத்தில் மாநகர சபைக்கு ஓர் உறுப்பினராக சென்று மாநகர சபையின் சொத்துக்களை பாதுகாப்பது எவ்வாறு என பாதுகாப்பு திட்டங்களை முன் வைத்தவர். நாம் காலாகாலமாக எதிர்கொள்ளும் வடிகான் பிரச்சினைகளுக்கு அவருடைய அனுபவ ரீதியான தீர்வுகளையும், திட்டங்களையும் முன்மொழிந்துள்ளார், பொறியியலாளர் சிராஜுதீன் ஒரு வளம், அந்த வளத்தை இன்று நாம் இழந்திருப்பது கவலை அளிக்கிறது." என உணர்வுபூர்வமாக உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மர்ஹூம் சிராஜுதீன் அவர்களின் நண்பரும், குடும்ப உறுப்பினருமான அக்கரைப்பற்று தேசிய பாடசாலை யின் முன்னாள் அதிபர் ஏ. எல். சுஹைப் அவர்கள் பொறியலாளர் மர்ஹூம் சிராஜுதீன் அவர்கள் பற்றி பல விடயங்களை எடுத்துக் கூறினார்.

தனது உரையில், கொழும்பு, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக கடமை புரிந்த காலத்தில் இவருடைய செல்வாக்கின் ஊடாக பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு 9 அடுக்கு மாடி கட்டிடத்தை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்குரியவர் என்றும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், அம்பாறை ஹாடி தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரி போன்றவற்றின் பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமை புரிந்தவர். அத்தோடு அம்பலத்தார் பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருப்பதோடு அப்பகுதியில் உள்ள வீதி அபிவிருத்திகளை திறன்பட செய்தவர், அக்கரைப்பற்று நகர பள்ளி, மற்றும் ஜும்ஆ புதுப்பள்ளி வாயல்களின் கட்டிட குழு ஆலோசகராகவும் கடமையாற்றியதை நினைவு கூறினார்.

அதனை தொடர்ந்து கிழக்கிலங்கை அரபிக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் முஹம்மட் அஷ்ரப் அவர்களினால் துஆ பிரார்த்தனை இடம்பெற்றது. இந்த நிகழ்வில், பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மர்ஹும் சிராஜுதீன் அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: