News Just In

3/06/2025 09:07:00 AM

மட்டக்களப்பில் காணப்படும் நீண்டகால காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுதான் என்ன..!இரா சாணக்கியன்

மட்டக்களப்பில் காணப்படும் நீண்டகால காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுதான் என்ன..!. நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சரிடம். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதிலின் போது 05.03.2025.


இந்த வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சினை 1982ஆம் ஆண்டிலிருந்து, அதாவது சுமார் 43 வருடங்கள் கடந்து தொடர்ந்து வருகின்றது. இந்த வீட்டுத்திட்டமானது களுவங்கேனி பிரதேசத்தில் அமைக்கப்பட்டு அந்த பிரதேச மக்கள் மிக நீண்ட காலமாக உறுதி இல்லாத பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆகியவற்றில் கலந்துரையாடினோம்.

உண்மையில் இது மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களில் தீர்வு காண முடியாத வகையில் கடந்த அரசாங்க காலப்பகுதியிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக உங்களது அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் பிம்சவிய என்ற திட்டத்தின் கீழ் காணி உரிமம் இல்லாதவர்களுக்கு ஒப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார். அதேபோன்று தான் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் உறுதிகள் வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையிலே இந்த விடயம் தொடர்பாக உங்களுடைய அமைச்சின் ஊடாக குழு ஒன்றை நியமித்து, இதுவொரு தனியார் காணியில் அமைக்கப்பட்டது என்றால் இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படும் போது இது அரச காணி இல்லை என்று களுவாங்கேனியில் அந்த காலப்பகுதியில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இன்று இது தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினால் மக்கள் அதற்கு என்ன செய்வது? அரசாங்கம் தான் இதற்கு ஏதேனும் வழி செய்ய வேண்டும். அந்தவகையில் என்னுடைய கேள்வி. உங்களுடைய அமைச்சின் ஊடாக இதற்கான ஒப்பம் வழங்குவதற்கு ஒரு பொறிமுறையை கண்டறிந்து ஒரு குழுவை நியமித்து மக்களுக்கு ஆட்சி உறுதி எழுதுவதனை அரசாங்கம் ஏன் செய்து தர முடியாது?

அமைச்சர் அநுர கருணாதிலக்க: கௌரவ சபாநாயகர் அவர்களே நான் ஏற்கனவே கூறியது போன்று இத்திட்டத்திற்கான தொழில்நுட்ப உதவி மாத்திரமே வீடமைப்பு அதிகார சபையினால் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இத்திட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் ஊடாகவே முழுமையாக செயற்படுத்தப்பட்டது. எமது அமைச்சின் விடயப்பரப்பிற்கு அமைய இது தொடர்பில் தலையீடு செய்ய முடியாது. எனவே இது தொடர்பில் அப்பிரதேச மாவட்ட செயலாளரின் ஊடாகவே அவ்வாறான குழுவொன்றை நியமித்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இது போன்ற எத்தனையோ பிரச்சினைகள் மட்டக்களப்பு எல்லைக்குள் காணப்படுகின்றன. தற்போது நகர அபிவிருத்தி அமைச்சை எடுத்துக் கொண்டால், மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் எத்தனையோ தரப்பினர் காணிக்கு ஒப்பம் இல்லாமல் இருக்கின்றார்கள். வீடமைப்பு அதிகாரசபையால் கட்டப்பட்ட வீடுகள் இருக்கின்றது. ஆனால் ஒப்பம் இல்லை. ஆனால் அவர்களுக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோன்று தான் நகர அபிவிருத்தி அதிகாரசபை எல்லைக்குள் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன.

உங்களது அமைச்சுக்கு தரப்பட்ட பொறுப்புகளுக்கு அப்பால் நீங்கள் செய்ய முடியாவிட்டால் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் நீங்கள் உங்களுடைய ஏனைய அமைச்சர் குழாமுடன் கலந்துரையாடி இவ்வாறான விடயங்களுக்கு தீர்வு காணலாம். உதாரணமாக மட்டக்களப்பு மாறகர சபை எல்லைக்குள் காணிகளுக்கு ஒப்பம் வழங்குவதற்கே பின்னடிக்கிறார்கள். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அபிவிருத்தி குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 ஏக்கர் காணி வழங்கி அதற்கு ஒப்பம் வழங்கி உள்ளீர்கள். அவர்களுக்கு ஒரு பயிற்சி நிலையத்தை அமைப்பதற்கு. அந்தவகையில் கடந்த அரசாங்கங்களில் மேற்கொண்ட தவறுகளை தட்டிக் கேட்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இந்த ஆணையை வழங்கி உள்ளார்கள்.

இன்று கவலையான விடயம் என்னவென்றால், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இல்லை. பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் இல்லை. இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது மிகவும் குறைவாக இருக்கின்றது. அந்தவகையில், ஏனைய அமைச்சர்களையும் இணைத்து இவ்விடயத்தில் ஏதேனும் ஒரு வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க உங்களால் முடியுமா, முடியாவிட்டால் கூறுங்கள் நாங்கள் அடுத்த அரசாங்கத்தில் பார்த்துக் கொள்கின்றோம்.

அமைச்சர் அநுர கருணாதிலக்க: நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று,இது தொடர்பில் மாவட்ட செலாளருக்கே நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதேபோன்று தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் பல்வேறு வீட்டுத்திட்டங்களுக்கு காணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்ட பின்னர் அதற்கான உரித்தை பெற்றுக் கொடுப்பது ஒரு நீண்ட செயற்பாடு. அவர்களுக்கான கொடுப்பனவை மேற்கொள்ள சுமார் 30 வருட காலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவு முழுமையடைந்த பின்னரே உரித்து வழங்கும் செயற்பாட்டை நிறைவேற்ற முடியும். அதற்கமைய பல்வேறு சந்தர்ப்பங்களில் பல காணிகளுக்கு உரித்து வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் மேற்படி விடயம் தொடர்பாக வீடமைப்பு அதிகாரசபைக்கோ அல்லது எமது அமைச்சுக்கோ எதுவும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட மாவட்ட அபிவிருத்தி குழுவில் கலந்துரையாடி அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதே சிறந்ததாக அமையும்

No comments: