முதலாவது இலங்கை நிருவாக சேவை அதிகாரியான பெண் உட்பட இன்னும் முன்னணியிலுள்ள பெண்களைக் கௌரவித்துப் பாராட்டும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக – வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்" எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த இந்நிகழ்வில் பல்வேறு சவால்களை எதிர் கொண்டு கல்வி, பொருளாதாரம், தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு வாழ்வியல் அம்சங்களில் முன்னிலை வகிக்கும் பெண்கள் கௌரவித்துப் பாராட்டப் பட்டார்கள்.
இதில் மூதூர் பிரதேசத்தின் முதலாவது பெண் இலங்கை நிருவாக சேவை அதிகாரியான உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எப். றொசானா, ஓய்வு நிலை சமூர்த்தி அபிவிருத்தி அலுவலர் வி. இராசம்மா, பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் என். சிபாதாபானு, மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் சியாமா பஹி உள்ளிட்ட 18 முன்னிலைப் பெண்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் சான்றிகழ்களும் நினைவுச் சின்னங்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம், வீ எபெக்ற், வேர்ள்ட் விஷன், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் ஆகிய நிறுவனங்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தன.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக், மேற்கத்தேயம் சார்ந்த கல்வி அதன் வழிகாட்டலினூடாகத்தான் இவ்வாறான சர்வதேசப் பெண்கள் தினத்தை நாம் அனுசரித்துக் கொண்டிருக்கின்றோம். எமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை சிறப்பானது.
தற்போது அரசு அமுல்படுத்தும் கிளீன் சிறிலங்காவின் வேலைத் திட்டத்தைத் தொலமியின் தேசப்பட்த்திலிருந்துதான் ஆரம்பித்திருக்கின்றார்கள். ஏனென்றால் தொலமி தேசப்படம் வரைந்த அந்தக் காலத்தில் இலங்கை சகல விதமான முன்னேற்றங்களையும் அடைந்து காணப்பட்டது.
அப்போது இலங்கையின் புகழ் உலகம் முழுவதும் பரவியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஜப்பானுக்கு அடுத்ததாக ஆசியாவின் இரண்டாவது தலா வருமானத்தைத் கொண்ட தன்னிறைவுப் பொருளாதாரத்துடன் மிளிரும் நாடாக இலங்கை இருந்துள்ளது. ஆனால் அவ்வாறிருந்த நாடு இப்பொழுது மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்று விட்டிருக்கிறது.
எனவேதான் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினூடாக இலங்கையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும். அதன் மூலம் ஒழுக்க விழுமியங்கள் பண்பாடுகள் அபிவிருத்திகள் உயர வேண்டும். என்ற அந்தக் கண்ணோட்டத்திலேயே மகளிர் அபிவிருத்தியையும் நோக்குவோமாக இருந்தால் சங்க காலத்தில் இருந்தே பெண்கள் கல்வியிலும் ஏனைய அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்துடனேயே காணப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்களில் பெண்கள் ஆட்சியாளர்களாகவும் கல்விப் புலத்தில் சிறந்தும் விளங்கியிருக்கின்றார்கள்.
பெண்களின் வகிபாகம் மிகவும் முக்கியமானதாகக் காணப்பட்டிருக்கின்றது. இன்றும் அந்த ஒட்டு மொத்த முன்னேற்றதிற்காகவே பெண்கள் தங்களை அர்ப்பணித்தவர்களாக இருக்கின்றார்கள். எனவே பெண்களைப் பாராட்டிக் கௌரவிப்பதில்; பெருமைப்படத்தான் வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் பெண்களின் வாழ்வியல் அர்ப்பணிப்பைச் சிலாகித்து உரையாற்றிய இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் பெண்களை சகல வழிகளிலும் முன்னேற்றுவதில் ஆர்வலர்களான ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம பங்குண்டு. ஆற்றலுள்ள பெண்கள் மறைந்து வாழ்கின்றார்கள். அவர்களை முன்னுதாரணமாக வெளிக் கொண்டு வந்து அனைத்துப் பெண்களையும் சாதனையாளர்களாக ஆக்குவதுதான் ஆர்வலர்களான நமது நோக்கம்” என்றார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக அனைத்துப் பிரிவு அலுவலர்கள், மூதூர் மற்றும் சம்பூர் பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், மகளிர் அபிவிருத்தி அலுவலர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள் சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் உட்பட இன்னும் பலர் பங்கு பற்றினர்.
No comments: