News Just In

3/27/2025 07:07:00 AM

படித்த சமூகமொன்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

படித்த சமூகமொன்றின் பாராளுமன்ற உறுப்பினர்கள்


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாதங்களை வியந்து நோக்கிய காலம் ஒன்றும் இருந்தது.ஒரு காலத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உரையாற்றும்போது அந்த உரையை வியந்தவர்கள் உண்டு. அமிர்தலிங்கம் பேசிக் கொண்டிருக்கும்போது, அற்புதமான உரையென்று சபாநாயகரே பாராட்டிய சந்தர்ப்பங்களும் உண்டு.

அந்தளவுக்கு அன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையின் கனதியும் அதனை வெளிப்படுத்தும் நாகரிகமும் அவர்களின் அரசியல் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் – எதிர்ப்பவர்களால்கூட வியந்து நோக்கப்பட்டது. அன்றைய சூழலில் வடக்கு, கிழக்கில் முக்கியமாக வடக்கிலிருந்து சென்ற தமிழ் பிரதிநிதிகள் கருத்து வேறுபாடுகளை கடந்தும் மதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், இன்று ஒருவர் பேசுவதை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் அனைவருமே இப்படித்தானா என்று பரிகசிக்குமளவுக்கு நிலைமை தரம் தாழ்ந்துவிட்டது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் தொடர்பான காணொலிகள் ஓய்வுநேர நகைச்சுவைக்காக பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒடுக்குமுறைக்குள்ளாகி இருப்பதாகக் கூறிவரும் – அதற்கான நீதியை பெற்றுத்தரும் பொறுப்பை சர்வதேசத்திடம் எதிர்பார்க்கும் தமிழ் சமூகம் தங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களை சரியாகத் தெரிவு செய்ய முடியாத சமூகமாக இருப்பதுதான் இந்த பரிகாச நிலைக்குக் காரணம்.

பொருத்தமற்றவர்கள் பொருத்தமற்ற இடங்களுக்காகத் தெரிவு செய்யப்படுகின்றபோது, அவர்கள் பொருத்தமற்ற நடவடிக்கைகளைத் தான் முன்னெடுப்பார்கள். அதுதான் தற்போது ஒவ்வொரு அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் பாராளுமன்றத்திலும் அரங்கேறிவருகின்றது. யாழ்ப்பாண அபிவிருத்தி குழுக் கூட்டங்களில் பங்குகொள்ளும்
இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தமிழ் பிரதிநிதிகளின் சண்டைகளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கின்றனர்.

எந்தளவுக்கு இழிநிலைக்குள் தமிழ் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன? தமிழ் மக்களை வெறும் தேசியவாத சுலோகத்தை முன்வைத்து அணி திரட்ட முற்பட்டதுதான் இன்றைய அனைத்துவிதமான அவல நிலைக்கும் காரணம். தமிழ் மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும், ஒன்றுதிரட்டுவதுதான் தமிழ்த் தேசியம் என்றவாறான தவறான கருத்துகளை விதைத்தவர்களும் இந்த அவல நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாவர்.

மக்களை வசியப்படுத்துவதற்கு எவ்வாறான மலினமான விடயங்களையும் தேசியத்தின் பெயரால் செய்யலாம் என்னும் நிலைமையே இன்று ஏற்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் முட்டாள்தனமாக பேசினால் அதனை தவறு என்று விமர்சிப்பதை விடவும் அற்புதமாக வெளுத்து வாங்கினீர்கள் என்று கூறி, சன்மானம் கொடுப்பதற்கு புலம்பெயர் சூழலில் ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது. அவர்களும் இவ்வாறான அவல நிலைக்கு முக்கிய காரணமாவர்.

இந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோர் தமிழ் மக்கள் மத்தியில் எவ்வித அர்ப்பணிப்பும் இல்லாமல் தலைவர்கள் ஆகிவிடலாம் என்னும் நிலைமை உருவாகிவிட்டது. இந்தப் பின்புலத்தில்தான் முகநூல்களில் தொடர்ந்து பரபரப்பான காணொலிகளை வெளியிடுபவர்கள், விடுதலைப் புலிகள் தொடர்பில் முகநூல்களில் பதிவிடுபவர்கள் அனைவரும் உடனடி கதாநாயகர்களாகி விடுகின்றனர். இந்த அவலநிலைக்கு முதல் காரணம் சிந்திக்காமல் வாக்களிக்கும் மக்கள். இரண்டாவது காரணம் இவ்வாறான முட்டாள்தனங்களை இரசிக்கும் புலம்பெயர் மனோபாவம்.
நன்றி ஈழநாடு 

No comments: