
நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா அவசர உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.
மியான்மாருக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா அவசர உதவி பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை மியான்மரை உலுக்கிய பேரழிவு நிலநடுக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சுமார் 15 டன் அத்தியாவசிய பொருட்களை நிவாரண நடவடிக்கையாக அனுப்பி வைத்துள்ளது.
7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து 6.8 ரிக்டர் அளவிலான வலுவான பின் அதிர்வும் இப்பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியது.
இந்திய விமானப்படையின் (IAF) C-130J விமானத்தில் ஏற்றப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் இருந்து புறப்பட்டன.
இந்த முக்கியமான தொகுப்பில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கும் கூடாரங்கள் மற்றும் தூங்கும் பைகள், போர்வைகள், உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள், நீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார கருவிகள், சூரிய விளக்குகள் மற்றும் ஜெனரேட்டர் செட்டுகள், நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கான மருத்துவ பொருட்களான பாராசிட்டமால், ஆன்டிபயாடிக்குகள், கேனுலாக்கள், சிரிஞ்சுகள், கையுறைகள், காட்டன் கட்டு மற்றும் சிறுநீர் பைகள் என பலவிதமான அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான தாய்லாந்து வரை பாதிப்பை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக தனது பிரார்த்தனை வெளிபடுத்திய பிரதமர் மோடி மேலும், விரிவான உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
மியான்மரின் ஜுண்டா தலைவர் மின் ஆங் ஹ்லைங், 144 பேர் உயிரிழந்ததாகவும், 732 பேர் காயமடைந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.
மீட்பு முயற்சிகள் தொடரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்தார்.
No comments: