News Just In

2/17/2025 02:56:00 PM

இலத்திரனியல் சாதனங்களின் வியாபகத்தில் இளையோர் சிக்கித் தவிக்கும் கால கட்டத்தில் பெற்றோர் திணறிப் போயுள்ளார்கள்

இலத்திரனியல் சாதனங்களின் வியாபகத்தில் இளையோர் சிக்கித் தவிக்கும் கால கட்டத்தில் பெற்றோர் திணறிப் போயுள்ளார்கள்.
சமூக அறிஞர் கலாநிதி றவூப் ஸெய்ன்




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இலத்திரனியல் சாதனங்களின் வியாபகத்தில் இளையோர் சிக்கித் தவிக்கும் கால கட்டத்தில் பெற்றோர் திணறிப் போயுள்ளார்கள் என சமூக அறிஞரும் பாதிஹ் உயர்கல்விக்கான நிறுவகத்தின சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆய்வாளருமான கலாநிதி றவூப் ஸெய்ன் தெரிவித்தார்.

காத்தான்குடி கென்ற் ஆங்கிலக் கல்வி நிறுவகத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு காத்தான்குடி தேசியக் கல்லூரியில் இடம்பெற்றபோது அவர் இந்தக் கருத்தை சுட்டிக் காட்டிப் பேசினார்.

ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கென்ற் ஆங்கிலக் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளருமான அனீஸா பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி றவூப் ஸெய்ன்,

சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து காத்தான்குடி கென்ற் ஆங்கிலக் கல்வி நிறுவகம் அளப்பரிய கல்விப் பணியாற்றி வருவது மெச்சத்தக்கது.

ஆங்கில மொழிப் புலமையின் அவசியம் உணரப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில் இந்தக் கல்வி நிறுவகம் பல மாணவர்களை ஆங்கிலப் புலமையாளர்களாக உருவாக்கியிருப்பதை அறிந்தபொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எதிர்கால ஆங்கில அறிவூட்டல் பணி இன்னும் வியாபிக்க வேண்டும். அதன் மூலம் இந்தப் பிரதேச இளம் சமுதாயத்தினர் சர்வதேச தராதரத்தை அடைந்து பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு கொள்ள முடியும்.

இங்கே இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தங்களுடைய பிள்ளைகள் தங்களைக் கண்ணியப்டுத்துகிறார்கள் இல்லை. சொல் கேட்டு நடக்கிறார்கள் இல்லை. தொலைத் தொடர்பு இலத்திரனியல் சாதனங்களுக்கு அவர்கள் அடிமையாகி விட்டார்கள். அதன் வழியே நடக்கிறார்கள். போதை வஸ்துவுக்கு அடிமையாகிறார்கள். இப்படியான முறைப்பாடுகள் மலிந்து போயுள்ள ஒரு கால கட்டத்தில் இக்கட்டான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இது நெருக்கடியான கால கட்டம். இந்த நவீன இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள், போதைப் பொருள் பாவனை போன்ற செயல்கள் எங்களுடைய இன்றைய இளையோர்களான எதிர்காலத் தலைவர்களின் வாழ்க்கை முறையில் அநேக பாதிப்புக்களைச் கொண்டு வருவதாய் அமைந்து விட்டிருக்கிறது.

இது சமகாலத்தில் பெற்றோர்களுக்கு பெருத்த சவாலாகவும் காணப்படுகிறது. பிள்ளைகளை சிறந்த பிரஜைகளாக உருவாக்குவது ஒரு பாக்கியம் நிறைந்த செயல். அந்தக் கடமையைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றினால் பெற்றோருக்கு வெற்றி நிச்சயம்” என்றார்.

இந்நிகழ்வில் தென் கிழக்குப் பல்கலைக் கழக ஆங்கில கற்பித்தல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம் சமீம் , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்தியத்துக்கான இணைப்பாளர் அப்துல் அஸீஸ் உட்பட கல்வியாளர்கள், அதிபர்கள், அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments: