சீரற்ற காலநிலையினால் இறால் பண்ணையாளர்கள் கடுமையான பாதிப்புதாங்கவொண்ணா இழப்பு என்றும் தெரிவிப்பு
சமீபத்திய சீரற்ற காலநிலையின் காரணமாக கனமழை வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்பில் ஈடுபடும்; பண்ணையாளர்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
பண்ணையில் வளர்க்கப்பட்ட இறால்கள் இன்னும் சில வாரங்களில் பிடிப்பதற்காக திட்டமிட்ட நிலையில் இவ்வாறு வெள்ளப்பாதிப்பு நிகழ்ந்து இறால்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நீரில் அடித்து செல்லப்பட்டமை தங்களுக்குக் கவலை அளிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
தங்களின் இறால் பண்ணை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தமையினால் பண்ணை வயல்களில் வளர்க்கப்பட்ட இறால்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் லெ;லப்பட்டதாகத் தெரிவிக்கும் அவர்கள் இதனால் தங்களுக்கு பல இலட்சம் ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
மண்முனை மேற்கு – வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு கிராமத்தில் சுமார் 77 ஏக்கரில் 19 பண்ணையாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். வங்கியிலிருந்து கடன் பெற்றும் தங்களது தங்க நகைகளை அடகு வைத்தும் இறால் வளர்ப்பில் ஈடுபட்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இழப்பைத் தங்களால் தாங்க முடியாத நிலையில் உள்ளமையினால் அழிவடைந்த இறால் பண்ணையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என பண்ணையாளர்கள் அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments: