News Just In

12/24/2024 11:00:00 AM

“கிளீன் சிறிலங்கா” ஆணைக்குழுவில் தமிழர் முஸ்லிம்கள் எவரும் இல்லை. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்.!

“கிளீன் சிறிலங்கா” ஆணைக்குழுவில் தமிழர் முஸ்லிம்கள் எவரும் இல்லை. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் “கிளீன் சிறிலங்கா” எனும் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 18 உறுப்பினர்களும் பெரும்பான்மை இனத்தவர்களாகவே உள்ளனர். தமிழர்களோ முஸ்லிம்;களோ அந்தக் குழுவில் இடம்பெறவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்லின சமூகங்கள் உள்ள இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் இடம்பெறாத நிலைப்பாடு தமிழ் பேசும் சமூகத்தவர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறுதான் கடந்த பொதுஜனப் பெரமுன அரசாங்க காலத்திலும் ஜனாதிபதி கோத்தபாயவினால் அமைக்கப்பட்ட தொல்லியல் ஆணைக்குழு என்கின்ற, தமிழ் பேசும் மக்களுக்குத் தொல்லைகள் கொடுத்த ஆணைக்குழுவிலும் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இடம்பெற்றிருக்கவில்லை.

பொதுஜன பெரமுன அரசும் தொல்லியல் ஆணைக்குழுவும் இனமத அடிப்படைவாத, அடிப்படையில்தான் அமைந்திருந்தது. தொல்லியல் இடங்களை இனங்காணும் செயற்பாடுகள் மற்றும் பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளும் அடிப்படைவாத செயற்பாடுகளாகவே இருந்தன.

தற்போதைய தேசிய மக்கள் சக்தியால் அமைக்கப்பட்ட கிளீன் சிறிலங்கா ஆணைக்குழுவில், தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர் இடம்பெறாத நிலைமையும் சந்தேகத்தைத் தருகின்றது.

முதல் கோணில் முற்றும் கோணும் என்கின்ற பழமொழியொன்று தமிழில் உண்டு. ஆயின், இந்த ஆணைக்குழுவில் தமிழர்கள், முஸ்லிம்;கள் இடம்பெற வேண்டியது அவசியமாகும். இல்லாது விட்டால், குழுவின் செயற்பாடுகளிலும் சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, ஜனாதிபதி அநுரவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அடிப்படைவாதமற்ற தன்மையை ஆரம்பத்தில் இருந்தே உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த 75 ஆண்டுகளாக நிலவி வருகின்ற அடிப்படைவாதம், ஊழல், மோசடிகள், திருட்டுக்கள், இலஞ்சம் என்பவற்றால் நாசமாக்கப்பட்ட இந்நாட்டை சுத்தம் செய்ய வேண்டிய தேவை அவசியமானதாகும். சுத்தப்படுத்த வல்ல தமிழர், முஸ்லிம் பிரசைகளும் இலங்கையில் உள்ளனர் என்பதை ஜனாதிபதி அநுர அவர்கள் நினைவில் கொண்டு, செயலாற்ற வேண்டும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: