News Just In

12/23/2024 10:42:00 AM

வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட வாகன சோதனை நடவடிக்கை!

வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட வாகன சோதனை நடவடிக்கை




பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாகன சாரதிகள் மது போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துதல், பொருத்தமற்ற நிலையில் உள்ள டயர்கள் அல்லது கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் உள்ள வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறான, குறைப்பாடுகளுடன் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அந்தந்த பிரிவுகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை,வாகனங்களை சோதனையிடுவதற்கு 24 மணிநேரமும் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகளை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: