News Just In

11/02/2024 05:43:00 AM

தமிழரசுக் கட்சி தே.ம. சக்தியுடன் கைகோர்க்கும் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க இணக்கம் - உதய கம்மன்பில


தமிழரசுக் கட்சி தே.ம. சக்தியுடன் கைகோர்க்கும் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க இணக்கம் - உதய கம்மன்பில



இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணையும். தமிழ் தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிக்குமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் ஒன்றிணைவது அவர்களின் அரசியல் உரிமை. அதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்னவென்பதை ஆராய வேண்டும்.

ஒற்றையாட்சி முறைமையிலான அரசியலமைப்பை நீக்கி, சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட 30 .1 தீர்மானத்தை மீளமுல்படுத்த வேண்டும் என்ற இரண்டு பிரதான நிபந்தனைகளை இலங்கை தமிழரசுக் கட்சி விதித்துள்ளது. இவ்விரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரனுக்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்குவதில் தனிப்பட்ட ரீதியில் எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ஆனால் அது நாட்டின் ஒற்றையாட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இந்த பிரேரணையில் இருந்து விலகியது.

30.1 தீர்மானத்தை மீண்டும் அமுல்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சி நிபந்தனை விதித்துள்ள நிலையில் இராணுவத்தினருக்கும், பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக சாட்சியம் திரட்டுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டுக்கு எதிரான இச்செயற்பாடுகளுக்கு எவ்வாறு இடமளிப்பது என்றார்.

No comments: