News Just In

10/20/2024 06:21:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உணர்திறன் அறிக்கையை கையளிக்க தயாராகும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உணர்திறன் அறிக்கையை கையளிக்க தயாராகும் கம்மன்பில



உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில், வெளியிடப்படாமல் இருப்பதாக கூறப்படும் உணர்திறன்கொண்ட ஆவணங்களை உரிய முறையில் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளிப்பதற்கு தாம் நேரம் ஒன்றை கோரியிருப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் எழுத்து மூல கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இந்த அறிக்கைகளை வெளியிடப்போவதாக அரசாங்கத்திற்கு அவர் சவால் விடுத்திருந்தார்.

இந்தநிலையில், அவரிடம் இருப்பதாக கூறப்படும் அறிக்கைகளை ஒப்படைக்குமாறு அரசாங்கம் அவருக்கு மூன்று நாள் கெடு விதித்தது.

இதனையடுத்தே, குறித்த உணர்திறன்கொண்ட அறிக்கைகளை கையளிக்க தாம் சந்திப்பு ஒன்றை கோரியுள்ளதாகவும், எனினும் இதுவரை அமைச்சர் விஜித ஹேரத் பதில் எதனையும் வழங்கவில்லை என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விபரங்களை வெளியிடும் நிலையில் தாம் இல்லை எனவும், எனவே அமைச்சரை சந்திப்பதற்கும், தம்மிடம் உள்ள பொருட்களை பொறுப்புடன் ஒப்படைப்பதற்கும் நேரம் கேட்டு பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் இந்த அறிக்கைகள், தாக்குதலின் போது, புலனாய்வுப் பிரிவினரின் பங்கு மற்றும் செனல் 4 ஆவணப்படத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலான கண்டறிதல்களை உள்ளடக்கியிருப்பதாக கூறப்படுகிறது

No comments: