News Just In

7/18/2024 02:19:00 PM

அடுத்தடுத்து சிக்கும் அரசியல் கட்சியினர்: பரபரப்பாகும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!




: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கொலையாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடி வரை கைமாறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக நேற்று சதீஷ், மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொலை வழக்கில் சிக்கியவர்களில் திமுக நிர்வாகி மகன், அதிமுக, பாஜக, தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக போலீஸார் தெரிவித்திருந்தனர். இதனால் இந்த கொலை வழக்கு பல்வேறு கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ், சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன், ஜாம்பஜார் ரவுடி சேகரின் மனைவி மலர்க்கொடி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் இக்கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டியது யார், அதற்கான காரணம் என்ன என்பது உட்பட பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை தனிப்படை போலீஸார் துருவி வருகின்றனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பரபரப்பான நிலையை எட்டி உள்ளது. இது ஒருபுறமிருக்க கொலையாளிகள் கொலைக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடியும், தமாகாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரன் ஆகியோர் அந்தந்த கட்சிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: