News Just In

6/14/2024 06:23:00 AM

யாழ்.ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் ; நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில் - பலரும் கண்டனம் தெரிவிப்பு




யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டமேற்படுத்தப்பட்டுள்ளது.

"திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை பொலிசாரின் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடயங்களைச் சேகரித்தனர்.

அத்துடன் பொலிஸ் விசேட கைரேகை நிபுணர்கள் பொருட்கள் மற்றும் வாகனங்களை எரிக்க பயன்படுத்திய பெற்றோல் கொண்டுவரப்பட்ட கொள்கலனை கைரேகை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவரின் கைரேகை அடையாளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் வீதியூடாக தப்பிச்சென்ற சிசிரிவி காணொளிகள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டும் பொலிசார் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்

No comments: