News Just In

6/30/2024 06:53:00 PM

திருக்கோணேச்சரத்தை அண்மித்த கடையொன்றை சீல் வைக்கச் சென்ற திருமலை நகரசபை ஊழியர் மீது தாக்குதல்!



திருக்கோணேச்சரம் ஆலயத்தை அண்மித்த கடைத்தொகுதி ஒன்றில் தடை செய்யப்பட்ட கசிப்பு ரக மதுபானம் விற்பனை செய்யப்பட்ட கடையானது திருகோணமலை நகரசபையினரால் சீல் வைத்து, பூட்டப்பட்டபோது நகரசபை ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் திருகோணமலை - திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினை அண்மித்த கடையொன்றில் தடை செய்யப்பப்பட்ட கசிப்பு வகை மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கருதப்பட்டு அந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் (30) அந்த கடைக்கு சீல் வைத்து, பூட்டப்பட்டதாக திருகோணமலை நகரசபை செயலாளர் தே.ஜெய விஷ்ணு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

இன்று நகரசபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அப்பகுதிக்கு நகரசபை அதிகாரிகள் விரைந்து கடையை சீல் வைக்க முற்பட்டபோதே அங்கு இனம் தெரியாத நபர் ஒருவரால் அரச கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு, நகரசபை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நகரசபை செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், சம்பவ இடத்தில் நின்றுகொண்டிருந்த காவல்துறையினரும் தாக்குதலை தடுக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: