News Just In

6/30/2024 01:28:00 PM

மொட்டுக் கூட்டை உடைத்தார் ரணில்!

 ஏழு பங்காளிகள் ரணில் பக்கம் தாவல்




கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து பயணித்த கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வளைத்துப் போட்டுள்ளார்.

அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துப் போட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது, பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியைப் பிளவுபடுத்தினார்கள்.

ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்கூட கை வைத்தார்கள். உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என ஹாட்ரிக் வெற்றியுடன் நாடாளுமன்றத்திலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்த ராஜபக்சக்கள் அணி, தற்போது அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ளது.

இந்நிலையில் அரசியல் ரீதியில் தாம் அநாதைகளாக்கப்படாமல் இருப்பதற்கு அவர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

ஆனால், ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கவும், தம்மைப் பலப்படுத்திக்கொள்வதற்காகவும் அவ்வப்போது ஏவிய அரசியல் அஸ்திரங்களை ஜனாதிபதி ரணில் தற்போது ஏவி வருகின்றார்.

அந்தவகையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மொட்டுக் கட்சியுடன் இணைந்து பயணித்த – கூட்டணி வைத்திருந்த ஏழு பங்காளிக் கட்சிகளை ஜனாதிபதி ரணில் வளைத்துப் போட்டுள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஆதரிக்கப்போவதாக மேற்படி கட்சிகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (கருணா), முற்போக்கு தமிழர் கழகம் (வியாழேந்திரன்), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (நிமல் சிறிபாலடி சில்வா அணி) என்பனவே ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் எம்.பிக்கள் சிலர் கூட ரணிலுடன் இரகசிய உறவு வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல மொட்டுக் கட்சியின் பிரிவொன்றையும் ஜனாதிபதி ரணில் உடைத்தெடுத்துள்ளார். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ரணில் பக்கம் நிற்காத பட்சத்தில் அக்கட்சி மேலும் பிளவடையும் சாத்தியம் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியையும் பிளவுபடுத்துவதற்குரிய வேட்டையை ரணில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்.

தற்போதைய சூழ்நிலையில் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன ஆகியோர் ரணிலுடனான உறவைப் பகிரங்கப்படுத்தி இருந்தாலும் மேலும் சிலர் திரைமறைவு உறவைப் பேணி வருகின்றனராம். அதேவேளை, மொட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த தேசிய சுதந்திர முன்னணி, பிவிருது ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் மொட்டுத் தரப்பை கைவிட்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

இதனால் அரசியல் ரீதியில் மொட்டுக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கூட்டணி அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கிடையில் ரணில் , ராஜபக்சக்கள் உறவு முறியுமா என்ற கேள்வி எழுகின்றது.

இன்னும் அந்தக் கட்டம் வரவில்லையென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ரணிலுக்கும், ராஜபக்சக்களுக்கும் இடையில் அடுத்த வாரம் தீர்க்கமானதொரு சந்திப்பு நடைபெறவுள்ளது.

அந்தச் சந்திப்பின் பின்னரே உறுதியான முடிவுகள் எட்டப்படும். நாடாளுமன்றம் ஜூலை 2 ஆம் திகதி கூடுகின்றது. இரு தரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் சபையில் முன்வைக்கப்பட்டு, விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

No comments: