News Just In

6/08/2024 12:33:00 PM

சாதனை மாணவி வஜீனாவை நேரில் சென்று வாழ்த்திய வடக்கு பொலிஸ் மா அதிபர்!



வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் கலைப்பிரிவில், வஜீனா பாலகிருஷ்ணன் என்ற மாணவி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 32 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிராமமான சாந்தை பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இவரது குடும்பமும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட ஒரு குடும்பமாக காணப்படுகின்றது.

கல்வி கற்பதற்கு கூட அவரது வீட்டில் ஒரு மேசை இருந்திருக்கவில்லை. இவ்வாறான குடும்பப் பின்னணியிலேயே குறித்த மாணவி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கான பாராட்டு விழா இன்றையதினம் சாந்தை சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி.ஏ.தனபால குறித்த பகுதிக்கு நேரில் சென்று தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி இன்றையதினம், அவர் கல்விகற்ற பாடசாலையான பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர கல்லூரியில் இருந்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர் மக்கள், ஆசிரியரகள், சக மாணவர்கள், கல்விமான்கள், அயல் ஊரவர்கள் என அனைவரும் புடைசூழ அவரது ஊரான சாந்தை கிராமத்திற்கு ஊர்வலமாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் சாந்தை சன சமூக நிலையத்தில் குறித்த மாணவிக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

உறவினர்கள், ஆசிரியர்கள் கல்விமான்கள் என பலர் மாணவிக்கு மலர் மாலை அணிவித்ததுடன்,பல்வேறு பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

ஊடகங்கள் வாயிலாக மாணவியின் சாதனையை பார்வையிட்ட புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் குறித்த மாணவிக்கு பரிசுப் பொருட்களை வழங்கியதுடன், புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவர் துவிச்சக்கர வண்டியையும் வழங்கி வைத்துள்ளார்.

அதனை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் மாணவியிடம் கையளித்தார்

No comments: