News Just In

6/14/2024 01:23:00 PM

குவைத் விபத்து: 7 தமிழர்கள் உடல்கள் கொச்சி வந்தடைந்தது - சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை!




குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கொச்சி கொண்டுவரப்பட்டன. இதில், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூவர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடல்கள் கொச்சியில் ஒப்படைக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களைப் பெற, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் மாநில அமைச்சர்கள் கொச்சி விமான நிலையம் வந்திருந்தனர்.

உயிரிழந்த தமிழர்களின் உடல்களைப் பெற, அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரள மாநிலம் கொச்சி வந்துள்ளார். தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரின் உடல்கள் கொச்சி கொண்டுவரப்பட்டது.

அவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் செஞ்சி மஸ்தான் அதன்பின், அவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்.

உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கொச்சின் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவைச் சேர்ந்த 31 பேரின் உடல்கள் கொச்சியில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

எஞ்சியுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: