News Just In

5/05/2024 03:01:00 PM

தமிழ் பொது வேட்பாளரை கண்டு திகிலடையும் சிங்களத் தலைவர்கள்!



தமிழ் மக்கள் ஐக்கியப்படும் போதெல்லாம் சிங்களதேச அரசியல் பரபரப்படைய தொடங்கிவிடும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியாவில் தமிழ் சிவில் சமூகம் ஒன்றுகூடி முடிவு செய்திருக்கிறது.

தமிழ் பொது வேட்பாளர் என்ற கோரிக்கை தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுத்தொடங்கிய நிலையில் சிங்கள தேசத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அச்சமடைய தொடங்கி விட்டனர்.

அதனால்தான் மேற்குலக ராஜதந்திரி ஒருவர் அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற தமிழர்களின் நிலைப்பாடு சிங்கள தேசத்தை மட்டுமல்ல சர்வதேச அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும், இலங்கைத் தீவில் தமிழ் மக்களுடைய வகிபாகம் என்ன என்பதையும், தமிழ் மக்களும், தமிழ் தலைவர்களும் உணர வேண்டும்

.இந்த பின்னணியிற்தான் தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதும், சிந்திப்பதும், செயற்படுத்துவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வவுனியா வாடி வீடு விடுதியில் ஒன்று கூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வருமாறு தீர்மானங்களை மேற்கொண்டனர்.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறையாண்மையையும், சுயநிர்ணைய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3. அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4. அதற்காக சிவில் சமூகமும், தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5. தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றிகொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புகளை நோக்காகக் கொண்டு செயல்படுவது.

இவ்வாறு சிவில் சமூகத்தினரின் நடவடிக்கையை அடுத்து சிங்களத் தலைவர்கள் அச்சமடைய தொடங்கி விட்டனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த அதே நாளில் தமிழர்களுக்கு நன்கு பரீட்சியமான மேற்குலக ராஜதந்திரி ஒருவர் அவசர அவசரமாக யாழ்ப்பாணத்திற்குச் சென்று முக்கிய சிவில் சமூகப் பிரதி ஒருவரை சந்தித்து "பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை தடுத்து விடாதீர்கள்" எனக் குறிப்பிட்டார்.

“தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தத்தான் போகிறார்கள்” என அந்த சிவில் சமூகப் பிரதி குறிப்பிட்ட போது "அப்படியாயின் தமிழ் மக்கள் தமது இரண்டாம் விருப்பத் தேர்வு வாக்கினை ரணிலுக்கு அளிக்கும்படி சொல்லுங்கள்" எ ன்றும் கேட்டுள்ளார்.

மேற்படி விடயம் ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத் தீவைப் பொறுத்தளவில் ஒரு சிறிய தேசிய இனமாக இருக்கலாம், ஆனால் இலங்கை தீவிலும், இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரசியலிலும், மேற்குலகத்தின் உலகம் தழுவிய அரசியலுக்கும் (பூகோள அரசியல்) ஒரு இன்றியமையாத வகிபாகத்தை வகிக்கிறார்கள் என்பது புலனாகிறது.

No comments: