News Just In

5/18/2024 05:50:00 AM

மிருசுவில் படுகொலை: கோட்டாபயவிற்கு நீதிமன்ற அழைப்பாணை!




யாழ்.மிருசுவில் பிரதேசத்தில் ஐந்து வயது குழந்தை உட்பட எட்டு தமிழ் அகதிகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கு அதிபராக இருந்த போது பொது மன்னிப்பு வழங்கியற்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவானது, நேற்றையதினம் (17) விடுக்கப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததை எதிர்த்து மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்படி, மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

No comments: