News Just In

5/29/2024 05:55:00 AM

எந்த பக்கம் பாயலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்: முஸ்லிம் தலைமைகளை விமர்சிக்கும் ஹசன் அலி!



 ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில் பல்வேறு தரப்பினரும் சாமர்த்தியமாக செயற்படுகின்ற நிலையில், முஸ்லிம் தலைமைகள் மாத்திரம் வழமை போன்று எந்தப் பக்கம் பாயலாம் என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகள் மிகச் சரியான வியூகங்களை வகுத்து கச்சிதமாக செயற்படுவதாகவும் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சிகள், முன்னெடுப்புகள் ஆரோக்கியமானவை எனவும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஊடகங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது பெருந்தேசிய கட்சிகள் மீது மாத்திரமல்லாமல் வௌிநாட்டு சக்திகள் மீதும் பாரிய அழுத்தங்கள் செலுத்தும் என தெரிவித்துள்ளார்.

மலையக தலைமைகள் குறித்த காலகட்டத்தினை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி மலையக வீட்டுத்திட்டங்கள், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயங்களை முன்னெடுத்துள்ளதாக ஹசன் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், முஸ்லிம் தலைமைகள் மாத்திரம் வெட்கித் தலை குனியக் கூடிய வகையில், வழமை போன்று குறுகிய இலாபத்துடன், எந்தப் பக்கம் பாயலாம் என்று பார்த்து கொண்டிருப்பதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்திலும் முஸ்லிம் தலைமைகள் இது போன்ற வரலாற்றுத் தவறினையே விட்டிருந்ததாக ஹசன் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த பெருந்தேசியத் தலைமையை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முஸ்லிம் கட்சித் தலைமைகள் வௌிப்படையாக அறிவித்து, அதற்கான காரணத்தை அறிவிக்க வேண்டும் எனவும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கேட்டுக்கொண்டுள்ளார்

No comments: