News Just In

5/28/2024 02:02:00 PM

ஐபிஎல் 2024-ல் யாருக்கு எவ்வளவு தொகை பரிசு தெரியுமா ?




ஐபிஎல் 2024 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.




ஐபிஎல் 2024 தொடரில் 2-வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.13 கோடியை பெற்றது.

ஐபிஎல் தொடரில் 3-வது இடம் பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.7 கோடி பரிசு வழங்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் 4-வது இடம் பிடித்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடி வழங்கப்பட்டது.

விராட் கோலிக்கு ரூ.10 லட்சம்: ஐபிஎல் தொடரின் 17-வது சீசனில் 741 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. விராட் கோலி இந்த சீசனில் ஒரு சதம், 5 அரை சதங்களை விளாசியிருந்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 154.69 ஆக இருந்தது.

சிறந்த பந்து வீச்சாளர்: ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹர்ஷல் படேலுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

வளர்ந்து வரும் வீரர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருதுடன் ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆல்ரவுண்டரான அவர், மட்டை வீச்சில் 303 ரன்களும், பந்து வீச்சில் 3 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

மதிப்புமிக்க வீரர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான சுனில் நரேனுக்கு மதிப்புமிக்க வீரர் விருதுடன் ரூ.12 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம்: ‘வழக்கமான ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். மேலும் கூடுதலாக போட்டிகள் நடத்தப்பட்ட 3 மைதானங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கிடைக்கும்’ என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 10 இடங்களில் ஐபிஎல் போட்டிகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. இம்முறை இந்த இடங்களுடன் குவாஹாட்டி, விசாகப்பட்டினம் மற்றும் தரம்சாலாவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




No comments: