News Just In

3/13/2024 07:22:00 PM

வவுணதீவுப் பிரதேச வறியவர்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவியாக தோணிகளும் சமையல் பாத்திரங்களும் வழங்கி வைப்பு!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் முதலிடமாக உள்ள வவுணதீவுப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவியாக தோணிகளும் சமையல் பாத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் வாழ்க்கைப்படி நிலை 1 எனும் செயற்திட்டத்தின் இணைப்பாளர் ரீ. றொபின்சன் மார்ஷல் தெரிவித்தார்.

சைல்ட் பண்ட் (Child Fund) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் அமுலாக்கத்தோடு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தோணிகளும் சமையல் பாத்திரங்களும் வழங்கும் நிகழ்வு புதனன்று 13.03.2024 வவுணதீவுப் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

வவுணதீவுப் பிரதேசச் செயலாளர் என். சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீனவர்களான பயனாளிகள் இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு தோணிகளும் மற்றொரு சமையல்காரரான பயனாளிக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சமையல் செய்யும் பாத்திரங்களின் தொகுதியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுணதீவுப் பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ். சபேஸ், வவுணதீவு முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஏயு லங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுச் செயலாளருமான கே. சத்தியநாதன் உள்ளிட்டோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

குடும்பத்தில் 5 வயதிற்குக் குறைந்த குழந்தைகள், வறுமை நிலை, தொழில் முயற்சிகளில் ஆர்வம், தாபரிப்புப் பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள் போஷாக்கு, விசேட தேவைக்குட்பட்ட நிலைமைகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிக்குத் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் பயனாளிகளின் 25 சத விகித பங்களிப்புடன் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் செயற்திட்டத்தின் இணைப்பாளர் ரீ. றொபின்சன் மார்ஷல் மேலும் தெரிவித்தார்.

No comments: